இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது உபயோகிக்கும் யூ-709 என்ற ஒரு மூட்டை உரத்தின் விலை சந்தையில் 15,000 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளுக்கு முன்னர் 8,750 ரூபா முதல் 9,500 ரூபா வரை காணப்பட்டது. இந்த அதிரடி விலை உயர்வு தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு தாங்க முடியாத உற்பத்தி சுமையாக மாறியுள்ளது.
இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களே வழங்குகின்றனர்.
இந்நிலையில் குறைந்த வருமானத்தை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்து இத்தொழிலை முன்னெடுத்துச் செல்வது அவர்களுக்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.



