வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது பொதுவாகவே நீண்டகாலமாக தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் விடயமாகும்.
இந்த விடயத்திற்காக இந்த நாட்டில் தமிழ் மக்கள் கடந்த 75வருடங்களுக்கு மேலாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடியதுடன் பல்வேறு இழப்புகளை சந்தித்தனர்.இன்று அதற்காக இராஜதந்திர ரீதியில் போராடிவருகின்றனர்.
கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.அதனை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது.கிழக்கினை விட்டுக்கொடுத்தால் அது தமிழர்களுக்கான அழிவாக அமையும் என்று அன்று தேசிய தலைவர் முன்னெடுத்த சபதம் என்பதை யாரும் மறுதலித்துசெல்லமுடியாது.
இவ்வாறான நிலையில் இன்று முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பது வடக்கு கிழக்கினை தனித்தனியாக பிரித்து மாகாண அதிகாரங்களை பகிர்வதற்கான நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை வேரோடு அழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளதுடன் இந்த திட்டத்திற்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள அரசியல் சக்திகளும் துணைபோகின்றதா என்ற சந்தேகம் இன்று பலமாக தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
இதன்காரணமாகவே அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் வடகிழக்கு மாகாணசபையினை எதிர்த்து நின்றார்கள்.அன்று சிங்கள தேசம் மாகாணசபை முறைமையினைக்கொண்டு தமிழர்களை பிரித்து தமது பௌத்த பேரினவாத செயற்பாடுகளை முன்nகொண்டுசெல்ல முன்னெடுத்த முயற்சிகள் விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டதன் காரணமாகவே இன்று வடகிழக்கில் குறிப்பாக கிழக்கில் தமிழர்களின் இருப்பு ஓரளவாவது பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகும்.
இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தினை திட்டமிட்டு பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதன் ஒரு அங்கமாகவே கடந்தகாலத்தில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அவர்கள் தனது கருத்துகளில் எல்லாம் வடக்கினை மட்டும் முன்னிறுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுவருகின்றார்.
கிழக்கினை திட்டமிட்ட வகையில் பிரித்து வடக்கிற்கான அதிகாரம் வழங்கி தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டோம் என்று சர்வதேசத்தினை ஏமாற்றலாம் என்ற நினைப்புடன் சிங்கள தேசம் தனது நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றது.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டமும் இந்த ஏமாற்றுவேலையின் நாடகம் என்பதை அனைவரும் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். உண்மையில் வடகிழக்கு தமிழர்களுக்கான தீர்வினை வழங்கவேண்டுமானால் தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மை சக்திகளை சாந்தப்படுத்தவும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தாலும் அரசாங்கத்திற்கு வடகிழக்கு தமிழர்களுக்கான உண்மையான தீர்வினை வழங்கும் எண்ணம் இருக்கின்றதா என்பதை நாங்கள் ஆராயவேண்டும்.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்று மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தப்பிப்பிழைத்துவருகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் பரம்பலே இன்று கிழக்கினை இருப்பினை பாதுகாத்துநிற்கின்றது.இவ்வாறான நிலையில் கிழக்கினை பாதுகாக்கவேண்டுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தினை பாதுகாக்கவேண்டியது மிக முக்கியமாகும்.
வடகிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தினை கையாளவேண்டிய அதிகாரம் தமிழர்களிடம் இருக்கவேண்டும் என்பதை தமிழ் தேசிய பரப்பில் இருப்போர் சிந்திக்கவேண்டும்.இன்று உள்ள கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களில் செல்வாக்கு செலுத்துவோம் மற்றும் இன்றைய நிலைமைகள் குறித்து சிந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படும் என்பதை விட 13வது திருத்த சட்டம் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் பகிரப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கான தீர்வாக இருக்கமுடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
13வது திருத்த சட்டம் மூலத்தின் மூலம் காணி அதிகாரங்கள் உட்பட வழங்கப்படும் அதிகாரங்கள் என்பது கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் இருப்பு வைக்கப்படும் வேட்டாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது.
1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 ஆம்ஆண்டு இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணம் காணப்படுவதன் காரணமாக தமிழர்கள் மத்தியில் முரண்பாடுகள் பல வகையிலும் தோற்றுவிக்கப்படுகின்றன.குறிப்பாக கிழக்கில் தமிழர்களின் ஆதிக்கம் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் பல்வேறு மோதல்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இந்த மோதல்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் 18க்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்களிலிருந்து தமிழர்கள் அகற்றப்பட்டார்கள்.இவ்வாறு திருகோணமலை மாவட்டத்திலும் பல கிராமங்களிலிருந்து தமிழர்கள் அகற்றப்பட்டனர்.இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற பதத்திற்குள் உள்ளனர்.ஏனைய பகுதிகளில் மூன்றாவது சிறுபான்மை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இன்று கிழக்கு மாகாணசபையின் ஆளுனராக தமிழர் ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளதனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு அநீதி நடைபெறாது என்பதற்கு அர்த்தம் அல்ல.கிழக்கு மாகாண ஆளுனராக தமிழர் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார் என்பது இன்று அனைவருக்கும் விளங்கும் என நினைக்கின்றேன்.
இந்தியா வடகிழக்கினை இணைத்து மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு வலியுறுத்தும் நிலையில் இந்தியாவினை சாந்தப்படுத்துவதற்கும் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்குமே தமிழர் ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கிழக்கு மாகாணசபையின் முக்கிய பொறுப்புகளின் செயலாளர்களாக சிங்களவர்களே உள்ளனர்.
ஆகவே 13வது திருத்த சட்டத்தினை வடகிழக்கினை இணைத்து அமுல்படுத்தும் நிலைமையேற்படுமானால் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக தமிழர்களிடமிருந்து பறிபோகும் நிலைமையே ஏற்படும்.ஏற்கனவே காணி பறிபோவதை தடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் காணி அதிகாரங்களை தனியாக கிழக்கு மாகாணசபைக்கு வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளும் பறிபோகும் நிலைமையையே ஏற்படுத்தும்.
எனவே அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்வுத்திட்ட விடயத்தில் வடகிழக்கு இணைந்த வகையில் தீர்வினை அதிகாரப்பகிர்வு செய்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் ஓரளவு நிம்மதியாக வாழும் நிலையுறுவாகும். மாறாக வடகிழக்கு பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படுமானால் தமிழர்கள் மீண்டும் போராடவேண்டிய சூழ்நிலையே ஏற்படும் என்பது மிகவும் கவலையான விடயமாகவே பார்க்கப்படவேண்டியதாகும்.