அரசியல் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும்; ‘தாய்நிலம்’ ஆவணப்பட வெளியிட்டில் சம்பந்தன்

அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும்
“தமது பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தை தமிழர் பெற்றிருக்க வேண்டும். இது புதிய விடயமல்ல. பிரிக்கப்படாத நாட்டுக்குள் வழங்கப்படும் முழு அதிகாரப் பகிர்வினைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் “தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று” என்ற ஆவணப் படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வினை ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டாக ஆரம்பித்து வைத்தார்கள். அதனையடுத்து விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பிரதான உரையை நிகழ்த்திய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்..

சம்பந்தன் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

“சுதந்திரம் அடைந்த நாள் முதல் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் வரலாறு தொடர்பாக கருத்துக்கு அங்கீகாரம் இருந்தது. இது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் பல அரசியல் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

அதிகாரப் பரவலாக்கல் தொடர்ந்தும் ஒரே வழியில் தொடராமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் தமது பகுதிகளில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்க வேண்டும். இது புதிய விடயமல்ல. பிரிக்கப்படாத நாட்டுக்குள் வழங்கப்படும் முழு அதிகாரப் பகிர்வினைத்தான் தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

வரலாற்று வாழ்விடத்தைப் பாதுகாக்கவும், சுயமரியாதையுடனும், கண்ணியத்துடன் வாழ்தல் அவர்களுடைய உரிமை என மனித உரிமைகள் பிரகடனத்தில் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதாரத்துக்கான சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் மனித உரிமைகளை நிறைவேற்ற உதவும் ஆணையாகக் காணப்படுகின்றது.”

இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனஞ் சார்ந்த நில ஆக்கிரமிப்பு: முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழ பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இந்த நிகழ்வில் இஸ்ரேல் நாட்டில் இருந்து பேராசிரியர் ஓரன் யிப்டசெல் முதன்மை உரை நிகழ்த்தினார்.

இதனையடுத்து விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு இடம்பெற்றது. ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொண்டனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021