தங்களது செயல்கள் மூலமாகவே ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியபோது, அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் சில அமெரிக்கர்களும், அமெரிக்க இராணுவத்திற்கு உதவியவர்களும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்காக அமெரிக்கா-தலிபான் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் தோஹாவில் நேற்றும் இன்றும் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தற்போது ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரக்கூடிய தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்லூரி செல்ல, பணிபுரிய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்டார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வோஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.
தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.