கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன்

1,123 Views
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்கல்வியால் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு தந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்- காங்கேயன்முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்

இந்த ஆண்டு ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியாரிடம் சுவாமி விபுலானந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தமிழர்க்குத் தேவையென வேண்டியதால் உருவான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக சுவாமி விபுலானந்தர் 1931ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் பொறுப் பேற்ற 80ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது.

சுவாமி அவர்களின் முத்தி நிலையின் 64ஆவது ஆண்டு நிறைவான 19.07.2021 அன்று

“தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய  மன்னுயி ரெல்லாந் தொழும்”

என்ற தவம் என்பதற்கு வரைவிலக்கணமாகத் தன் வாழ்வையே தமிழ் கூறு நல்லுலகு முன் நிறுத்திய சுவாமிகளை

 “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்  தெய்வத்துள் வைக்கப் படும்”

என்னும் வள்ளுவ வாக்குக்கமைய தெய்வமாகவே கொண்டாடும் நேரத்தில் அவர் தோற்றுவித்த தமிழ்க் கல்வி முறைமை என்பது தமிழ்த் தேசிய விழிப்புணர்வு தந்து, தமிழனைத் தமிழனாகத் தலை நிமிர்ந்து வாழ வைக்கும் சக்தித்திரள் என்பதை மிகச் சுருக்கமாக எடுத்து ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கும் போக்குமாகும்.

சங்க வெளி

தமிழ்க் கல்வி தமிழ்த் தேசியத்தின் அடிப்படை என்பது யாழ்ப்பாண அரசர் காலத்திலே நாடாண்டவர் அரசியற் கொள்கையாக அமைந்தது. இதனை உலகப் பல்கலைக் கழக அமைப்பின் முன்னோடிகளில் ஒன்றான ஒக்ஸ்வேர்ட் பல்கலைக் கழக அமைப்பு தோற்றம் பெறுவதற்கு முன்பே யாழ்ப்பாண அரசர்களுடைய காலத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றின் நிறுவுதலுக்காக சங்க வெளி என்னும் கிராமத்தையே அரசன் ஒதுக்கினார் என்னும் செய்தி உறுதி செய்கிறது.

இந்த நோக்கு நிறைவு பெறாத நிலையில், சங்கவெளி இன்றும் சங்குவெளி என்னும் கிராமமாக உள்ளது. இந்த யாழ்ப்பாண அரசின் கனவை சுவாமி விபுலானந்தர் ராஜா சேர் அண்ணாமலைச் செட்டியார் வழி நிறைவு செய்தார் என்பதை அவர் இராஜாசேர் அண்ணாமலைச் செட்டியாரிடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தொடங்குமாறு கேட்ட அவரின் வரலாற்றில் அறிகின்றோம்.

இவ்வாறாகத் தமிழ்த் தேசியம் வளரத் தமிழுக்கு முறைசார் உயர்கல்வி அமைப்பு ஒன்றினை உருவாக்கிய தமிழ்ப் பேரறிஞாரன சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் என்னும் அவரின் ஆய்வால் இசைத் தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும் உலகுக்கு வெளிப்படுத்தி நரம்புக் கருவிகளின் வழி வளர்ந்த பாணர் சமுதாயம் உலகின் தொல் குடிகளாக விளங்கிய பெருமையின் தனித்துவத்தை உலகுக்குத் தெளிவாக்கினார். யாழ்ப்பாணம் என்னும் சொல்லே பாணர் சமூகமாகத் தமிழர் வாழ்வியல் எழுச்சி உற்றிருந்த காலத்திலேயே கட்டமைக்கப் பட்டது என்பதை உணர இசைத் தமிழின் தொன்மையின் அறிவு எமக்கும் தேவையாக உள்ளது.

மதங்க சூளாமணி என்னும் பெயரில் செகசிற்பியர் என அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கில மகாகவி சேக்ஸ்பியரின் 12 நாடகங்களைத் தமிழ்ப் படுத்தியதன் மூலமாக தமிழ்க் கலைவாணியே ஆங்கில வாணியாகவும் ஆங்கில இலக்கிய எழுச்சிக்கு உதவினாள் என்னும் ஆன்மிக உணர்வையும் தமிழ்-ஆங்கில நாடக ஒப்பீட்டா ய்வுக்கான ஆய்வியல் தளத்தையும் உருவாக்கினார்.

தெற்கிலிருந்து வடக்கே அலைஎறிந்த அன்பு மதம் என்ற அற்புதமான ஆய்வின் மூலம் சைவமும், வைணவமும் தொல் தமிழினத்து தாய்த்தெய்வ வழிபாடு என்ற வேரில் இருந்து இரு ஆன்மீகக் கிளைகளாகத் தோன்றி இந்தியத் துணைக் கண்டம் முழுமையும் விரிவுற்ற வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து விரிவுற்றாலும் அவற்றின் ஒரே வழி அன்புநெறி என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தினார்.

இதன்வழி மதவழி தமிழர்களைப் பிரிக்க இயலாது என “யாதொரு தெய்வம் கண்டீராகி அத் தெய்வமாகி” என அருணந்தி சிவாச்சாரியார் கூறிய வகையில் மனிதாயத்தை வளர்க்கும் சிந்தனைகள் சமய நெறியாகி தெய்வ வழிபாடுகளைத் தோற்றுவித்தன என்பதை மனதிருத்தி, சமயசமரச நிலையை உருவாக்கியவர் சுவாமி விபுலானந்தர். சுவாமி முஸ்லீம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை இன்றும் முஸ்லீம் ஆய்வாளர்கள் நன்றியுடன் நினைவேந்தல் செய்து வருகின்றார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் தத்துவத்தைத் தன் வழியாகக் கொண்டு சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருவேற்களத்தில் ஒடுக்கப்பட்ட சேரி மக்களுக்கு நேரடியாகச் சென்று கல்விப் பணியும் உளவளத் துணையும் செய்து, சாதியத்தை வேரறுத்து மனித சமத்துவத்தை நிலைப் படுத்திய கல்வியியலாளர் சுவாமி விபுலானந்தர்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
தந்தை பெரியார்

தந்தை பெரியாரால் குடியரசு இதழை வெளியிட அழைக்கப்பட்ட பெருமைக் குரிய ஞானியரடிகள் உடன் இணைந்து சைவ சித்தாந்தப் பெரு மன்றத்திலும் சைவ சித்தாந்தம் தமிழர் ஆன்மிக பலம் என்பதை வைணவத் துறவியாகிய சுவாமி விபுலானந்தர் வெளிப் படுத்திய பொழுது, தமிழ்த் தேசியம் என்பது சாதிமத பிரதேச வேறுபாடுகளை எல்லாம் கடந்த மானிட அன்பில், மானிடர்க்கும் உயிர்களுக்கும் இயற்கைக்கும் அவை தங்கள் தங்கள் இயல்பான ஆற்றலை வெளிப் படுத்தி வாழும் சுதந்திர நிலையைப் பேணுதலே என்பதை உலகு அறிய வைத்தார். நாத்திகர்கள் என்றோ, சைவர்கள் என்றோ, வைணவர்கள் என்றோ, இஸ்லாமியர் என்றோ, கிறிஸ்தவர் என்றோ தமிழ்த் தேசியத்தைக் கூறுபோட இயலாது என்பதையும் உறுதிப் படுத்தினார்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசு சுவாமியின் சைவ தத்துவத்தையும், “கடமையைச் செய் பலனை எதிர்பாரதே” என்கின்ற கண்ணனின் கீதை மொழியையும் தன் வாழ்வாக அமைத்து, சைவ வைணவச் செயற்பாட்டு நிலை என்பது உயிர்களுக்கும் உலகுக்கும் அவற்றின் சுதந்திர வாழ்வுக்குத் தொண்டாற்றல்  என்பதேயென சுவாமிகளின் தமிழ்க் கல்வி முறைமைகள் தெளிவாக்கின.

இவ்வாறாகப் பிரான்சியப் புரட்சியின் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதை தமிழன் தன் வாழ்வியல் தத்துவமாகவே கொண்டனர் என கல்வி ஆய்வுகளால் உலகறியச் செய்தவர் சுவாமிகள்.

அறிவியல் பேரறிஞரான அவரின் அறிவியல் பேராற்றல் காரணமாக மூதறிஞர் இராஜாஜி தமிழில் அறிவியல் கலைச் சொல்லகராதியை அமைக்கும் சென்னைப் பல்கலைக் கழகக் குழுவுக்கு சுவாமிகளைத் தலைமை தாங்க வைத்தமை எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறாகப் பன்முக பேராற்றலாளரான சுவாமிகள் தமிழ்க் கல்வியால் எதனைச் செய்ய முனைந்தார் என்பதே இந்த எண்பதாவது ஆண்டில் நாம் எடுத்து நோக்க வேண்டியதாக அமைகிறது. சுவாமிகளின் இந்த நோக்குகள் நிறைவு பெறக்கூடிய போக்குகளை இன்றைய தமிழ்க் கல்வி கொண்டுள்ளதா என்பது அடுத்த முக்கியமான தேடலாக அமைகிறது.

மட்டக்களப்பின் காரைதீவில் 27.03.1892 இல் மண்ணில் மலர்ந்தது முதல் 19.07.1947 இல் விபுலானந்தர் என்ற ஜீவாத்மா பரமாத்மாவாக முத்தியடைந்தது வரையான 56 ஆண்டுகள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் முதுதமிழினமும் பாரினில் சிறந்தோங்க சுவாமி விபுலானந்தர் செய்த அரும்பணிகள் சொல்லிட இக் கட்டுரைக்கான இடம் போதாது. சுவாமிகளின் விபுலானந்தர் என்ற வடமொழி துறவறப் பெயரின் பொருள் அளவிட முடியா ஆனந்தம் என்பதாகும். சுவாமியை நினைக்கும் தோறும் அளவிட இயலாத இன்பம் மனதில் பெருகுவது அவரின் வாழ்வின் சிறப்பு.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
சோமசுந்தரப்புலவர்

மட்டக்களப்பின் தவப் புதல்வனை யாழ்ப்பாணம் தன் சொந்தப் புதல்வனாக வளர்த்த வரலாற்றையும்,  முத்தமிழ்ப் புலவர் என அவரை ஏற்றிப் போற்றி பட்டமளித்த தன்மையும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதற் தமிழ்ப் பேராசிரியராக சுவாமி விபுலானந்தர் பணிப்பொறுப்பு ஏற்ற பொழுது 02.101943 இல் யாழ்ப்பாணமே முதல் மதிப்பினை தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் கவிமழை பொழிய அளித்த பின்னரே மட்டக்களப்பு 29.04.4194இல் வரவேற்புக் கொடுத்தமையும், எடுத்து நோக்கும் பொழுது ஈழத்தில் மட்டக்களப்பார் யாழ்ப்பாணத்தார் என்ற அறியாமை இல்லா தமிழ்க்கல்வி ஈழமக்கள் அனைவரையும் தமிழர்கள் என்ற உணர்வுடன் உள்ளத்தால் நேசிக்கும் உயர்கல்வியாக இருந்தது என்ற உண்மை உணரப்படுகிறது. அவ்வாறே என்றும் தொடர உழைக்க வேண்டும் என்ற உறுதியும் பிறக்கிறது.

இதனாலேயே சுவாமியால் முன்னெடுக்கப்பட்ட கல்வி முறை முழுத் தமிழீழ மண்ணுக்குமான தேசியக் கல்வி முறைமை ஒன்றை தோற்று வித்தது எனத் துணிந்து கூற முடிகிறது.  சுவாமி அவர்களின் முயற்சியால் அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கம் இலங்கையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியத் தமிழர்களுக்காகவும் உருவாக்கப் பட்டது. இந்த அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்க ஆசிரியர்கள் வெறுமனே தமிழ் மொழியை மட்டும் படிப்பிக்கும் தமிழ் ஆசிரியர்களின் தொழிற் சங்கமாக அமையாது, எல்லாத் துறைகளிலும் கல்வி புகட்டும் தமிழர்கள் என்ற இனத்துவத்தையுடைய ஆசிரியர்களின் தொழிற் சங்கமாகப் பரிணமித்தது.

மேலும், தமிழாசிரியர் சங்கத்து உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய ஆடையான வேட்டி சால்வை அணிந்து ஐரோப்பிய வாக்கத்தில் இருந்து மண்ணை விடுவிக்கும் தமிழ்த் தேசிய மொழிவழி அடையாள அரசியலுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தனர்.

சுவாமியின் தமிழ்க் கல்வி என்பது மொழிக் கல்வி, இலக்கியக் கல்வி, சமயக் கல்வி என்ற பரப்புக்களைக் கடந்து அறிவியல் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, கலைக்கல்வி என பன்முகப்பட்ட பரந்த பரப்பைத் தன்னிடத்தில் கொண்டெழுந்து ‘தமிழியல்’ என்னும் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய பல்கலைக்கழக ஆய்வுத்துறை ஒன்றின் பிறப்புக்கு வித்திட்டது.

இந்தத் தமிழ்க் கல்வி  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி என்னும் தமிழர் தாயக மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலாக அமைந்ததினால் ‘தமிழ்த் தேசியம்’ விழிப்படைவதற்கான அறிவார்ந்த தளமாக அமைந்தது.

சுவாமி விபுலானந்தரின் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனைகளும், செயல்களும் ஈழத் தமிழர்களுக்கு தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் என்ற ஒருமைப்பாட்டுடன் கட்டி யெழுப்புவதற்குச் சக்தியளித்து தமிழரிடை காணப்பட்ட ஒருமைப் பாட்டுக்கு எதிரான சமூகவிலக்குகள் எல்லாவற்றையும், ஒருமைப் பாட்டுக்கான சமூக உள்வாங்கலாக மாற்றி அமைத்தது.

இதனாலேயே இலங்கைப் பல்கலைக் கழகக்தின் முதல் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் என்னும் பெரும் பொறுப்பும் சுவாமி விபுலானந்தரால் முழுமை பெற்றது என இன்றும் பெருமையுடன் பேசப் படுகிறது. சுவாமிகளின் தமிழ்க் கல்வி வழியிலேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தியானந்தன் என்ற ஈழத் தமிழ்க்கல்வி துறையின் முப்பெரும் தலைமைகளும் தோற்றம் பெற்று, பின்னர் பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, பேராசிரியர் அ. சண்முகதாஸ் என உலகப் பரப்பில் அளப்பரிய வளர்ச்சியினை தமிழியலுக்கு ஏற்படுத்திய ஒரு நீண்ட ஆற்றலுள்ள பேராசிரிய பரம்பரை ஈழத் தமிழ்க் கல்வியின் தனித்துவத்தையும் உலகுக்கு உணர்த்தியது.

இந்த தமிழ்ப் பேராசிரியப் பெருந்தகைகள் மண்ணையும், மக்களையும் நேசிக்கும் தமிழ்க் கல்வி வளரவும் மண்ணினதும் மக்களதும் வரலாற்றை மாற்றி அமைக்கின்ற வரலாற்றை உருவாக்கவும் கூடிய சத்தியை ஈழத் தமிழர்களுக்கு அளித்தார்கள் என்றால் அது தான் சுவாமி விபுலானந்தரின் தமிழ்க் கல்வியின் பெருமையும், சிறப்பும், தனித்து வமாகவும் உள்ளது.

நாமும் மானிடம் போற்றும் தமிழராக தன்மானம் இனமானம் காக்கும் தமிழராக மண்ணையும் மக்களையும் காத்து வாழ சுவாமிகளின் தமிழ்க் கல்வி தந்த தமிழ்த் தேசிய விழிப்பின் வழி வாழ்வாங்கு வாழ உறுதி பூணுவோமாக.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply