“தான்” என்ற நிலையை சிலுவையில் அறைந்து இறைவனுடன் ஐக்கியமாகி திரும்பவும் மீட்டெழுச்சி பெறுவதே உயிர்ப்பு ஞாயிறு – க.வி.விக்னேஸ்வரன்

“தான்” என்ற நிலையை சிலுவையில் அறைந்து இறைவனுடன் ஐக்கியமாகி திரும்பவும் மீட்டெழுச்சி பெறுவதே உயிர்ப்பு ஞாயிறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உயிர்ப்பு ஞாயிறு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில்,

உயிர்ப்பு ஞாயிறு (Easter) என்பது இயேசு கிறிஸ்துநாதர் கி.பி. சுமார் 33ம் ஆண்டளவில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் நினைவுறுத்தப்படும் ஒரு திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகின்றது.

சிலுவையில் அறையப்பட்ட போது யேசுநாதரின் வாயில் இருந்து வெளிவந்த ஏழு வசனங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. இந்த ஏழு வசனங்கள் எதைக் கூறின என்று ஆராய்ந்து பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இது ஒரு கிறிஸ்தவர் அல்லாத இந்துவின் பார்வை.

நான் உயிர்ப்பு ஞாயிறை நினைவுபடுத்த இன்னுமொரு காரணம் உண்டு. 2020 ஏப்ரல் 21ந் திகதி அன்று நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் நின்றேன். அன்று சியோன் தேவாலயம் வெடி குண்டால் தாக்கப்பட்டது. இதைக் கேட்டு வைத்தியசாலைக்கு சென்று படுகாயமுற்றவர்களைப் பார்வையிட்டேன். மனவேதனைப்பட்டேன். அன்று நீர்கொழும்பு சென்ற் செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிகுண்டு வெடித்தது. கொழும்பில் 6 இடங்களில் அதேவாறு வெடிகுண்டுகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடித்தன. அவையாவன கொச்சிக்கடை சென்ற் அந்தோனிஸ் தேவாலயம், ஹொட்டேல் கிங்ஸ்பெறி, ஹொட்டேல் ~ங்கிரிலா, ஹொட்டேல் சினமன் க்ராண்ட மற்றும் தெமட்டகொட, தெகிவளை ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. கடைசி இரண்டு இடங்களிலும் சற்று நேரம் செல்லவே வெடித்தன. அன்று இறந்தவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் பேசும் மக்களே. அரசியல் காரணங்களுக்காக குறித்த உயிர்ப்பு ஞாயிறு பாவிக்கப்பட்டமை நீங்காத வடுக்களை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த துன்பகரமான நிகழ்வையும் நினைவுபடுத்தும் விதத்தில் இந்த கட்டுரை அமைகின்றது.

யேசு கிறிஸ்துநாதரின் சிலுவை வசனங்கள் வருமாறு –

  1. பிதாவே இவர்களை மன்னியும் –   Luke 23:34
  2. இன்றைக்கு நீ என்னுடன் கூட சொர்க்கத்தில் இருப்பாய் – Luke 23:43
  3. அதோ உன் மகன் அதோ உன் தாய் – யோவா 19:26;27
  4. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்!- மத் 27:45,46 மார்க் 15:4
  5. தாகமாயிருக்கின்றேன்.   – யோவா 19:28
  6. முடிந்தது. – யோவா 19:30
  7. பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன். – Luke 23:46
  8. பிதாவே! இவர்களை மன்னியும்.

இதனைப் பாரம்பரியமாக கிறிஸ்தவர்கள் மன்னிப்புச் செய்தியாகவே வர்ணிப்பார். அதாவது தன்னை சிலுவையில் அறைய வைத்த றோமானிய போர் வீரர்களையும் அதில் பங்கு பற்றிய அனைவரையும் பரலோகத்தில் இருக்கும் பிதாவானவர் மன்னிக்க வேண்டும் என்று அவரிடம் இறைஞ்சுவதாகவே இக் கூற்று விவரிக்கப்படுகிறது. ஆனால் இந்து மதப் பின்னணியில் இருந்து பார்க்கும் போது அது சற்று வித்தியாசமாகத் தெரிகின்றது. அதாவது யேசுவின் ஏழு கூற்றுக்களும் மோக்~ம் அல்லது முக்தி நிலையை அடைய ஒரு ஆன்மாவானது எந்தெந்த நிலைகளைக் கடந்து செல்கின்றது என்பதை விவரிக்கும் விதமாகவே அவை அமைந்துள்ளன என்பது இந்துப் பெரியார்களின் கருத்து. சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சுவாமி சாந்தானந்த சரஸ்வதி இவை பற்றிய இந்து மதக் கருத்துக்களை வெளியிட்டமை ஞாபகத்திற்கு வருகின்றது.

ஏற்கனவே தனது முக்தி நிலைப் பயணத்தை யேசு கிறிஸ்துநாதர் தொடங்கி இருந்தார். அதாவது சிலுவையில் அறைய முன்னரே தமக்கு வரப் போவதை உணர்ந்து அவர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். தனது சீ~;யர்களின் கால்களைக் கழுவி தனது பணிவையும் அடக்கத்தையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆத்மா விடை பெற்றுப் போகும் பயணத்தில் ஈடுபடும் போது பணிவு மிக முக்கியம். “தான்” என்ற அகந்தை களையப்பட்டால்த்தான் ஒருவரால் தனது ஆன்மிகப் பிரயாணத்தில்த் திடமாகக் காலடி எடுத்து வைக்கலாம்.

“நீங்கள் யாவரும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்” என்பதே சிலுவையில் அறைதலுக்கு முன்னர் யேசுவால் பேசப்பட்ட கடைசி வார்த்தைகள். பணிவு, அன்பு போன்ற மனோநிலைகள் மேற்படி பயணங்கள் மேற்கொள்ளும் யாவரையும் வந்தடைவன.

ஏற்கனவே மத்யூ 19:24 ல் யேசுவானவர் பின்வருமாறு கூறியிருந்தார் – “ஊசி முனைக் காதினுள்ளே ஒட்டகம் ஒன்று போனாலும் இறை சாம்ராஜ்யத்தினுள் பணம் படைத்தவன் போகமுடியாது” என்று. அதற்கான காரணம் தன்னை ஒருவன் அடையாளம் காணும் போது தனது பணம், பதவி, அதிகாரம் போன்ற பலவற்றையும் தன்னுடன் சேர்த்தே அடையாளம் காண்கின்றான். அவை எவற்றையும் நாம் மரணிக்கும் போது கொண்டு செல்லப் போவதில்லை. உடலும் அற்ற நிர்வாண நிலையிலேயே பயணம் ஏற்படுகின்றது. ஆகவே ஆத்மா விடைபெறும் பயணத்தில் ஒருவன் ஈடுபடும் போது தனது பணம், பதவி, அதிகாரம் சகலதையும் தியாகம் செய்துவிட்டே பயணத்தைத் தொடங்க வேண்டும். இதைத் தான் யேசுநாதர் தனது சீடர்களின் கால்களைத் கழுவிய போது செய்தார். தான் குருநாதர் அவர்கள் சீடர்கள் என்ற அந்த உறவைக் கூட தியாகம் செய்து அவர்களின் கால்களைக் கழுவுகின்றார். இந்துமத கலாசாரத்தில் கால்களைக் கழுவுதல் கழுவப்படுபவருக்காக அல்ல கழுபுவவர் தன்னைத் தூய்மைப்படுத்தவே அதைச் செய்வார்.

ஆகவே ஆத்மா விடைபெறும் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டுதான் யேசு கிறிஸ்து சிலுவைக்குச் செல்கின்றார். அவர் சேரப் போகும் இடம் கூட அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. “நான் என் தந்தையுடன்; நீர் என்னுள் அடக்கம்; நான் உம்முள் அடக்கம் என்பதை நீவிர் அறிவீர்கள்” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த ஐக்கியமே அவர் குறிப்பிட்ட இறுதி சேரிடம். இனி அவரின் கூற்றுக்களைப் பார்ப்போம்.

“பிதாவே இவர்களை மன்னியும்”

ஆன்ம ஈடேற்றத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகைமை மன்னித்தல் ஆகும். இவ்வாறான மனோநிலை விழிப்புணர்ச்சியினால் வருவதொன்றாகும். அதாவது “நான் கூட, முன்னர், இவ்வாறான தவறுகளைச் செய்தேன். இப்போது என் முன்னுள்ள இவர் செய்கின்றார்; அறியாமையால் செய்கின்றார். பிதாவே! அவரை மன்னித்தலே உசிதமாகும்” என்ற பரந்த ஒரு விழிப்புணர்ச்சி எம் மனதில் ஏற்பட்டால்த்தான் மன்னிக்கும் அந்த மனோநிலை தானாகவே ஏற்படும். வெறுமனே பிறரது குற்றச் செயல்களைச் சகிப்பது மன்னிக்கும் சுபாவம் அல்ல. மற்றவர்களின் தவறான செயல்களைக் கண்டு உண்மையாகவே எமது மனதில் இறைவனை வேண்டி அவர்களுக்காகப் பிரார்த்தித்தல் தான் மன்னிக்கும் சுபாவம் ஆகும். அதாவது மற்றவர் தவறாக செய்த அனைத்தும் அவரின் அறியாமையால் செய்யப்பட்டதே. அவருக்கு இறைவன் மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே மன்னிக்கும் மனோநிலை. அத்துடன் மற்றவர்களை மன்னித்து அவர்களும் விழிப்புணர்ச்சி எய்த வேண்டும் என்ற மனோநிலை எம்முள் வளர வேண்டும். எனவே ஆத்மா விடைபெறும் பயணத்தில் முதல் படி அகந்தை அகற்றுதல். அடுத்த படி மன்னிக்கும் சிந்தனை.

எனவே தான் “பிதாவே அவர்களை மன்னியும்” என்று கூறுபவர், அவர்கள் அறியாமையால்த்தான் இவ்வாறு கூறுகின்றார்கள் என்ற கூற்று விவிலிய நூலின் பல இடங்களில் காணப்படுகின்றது.

எனினும் மன்னிப்பது என்பதே யேசு கிறிஸ்துநாதரின் தலையாய குணாம்சமாகும். கிறீஸ்துவத்தின் முக்கிய சாராம்சமும் அதுவே.

மன்னிக்கும் நிலைக்கு எமது ஆத்;மா விரிவடையும் போது அடுத்த நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம்.

  1. “இன்றைக்கு நீ என்னுடன் கூட சொர்க்கத்தில் இருப்பாய்” என்பதே அது.

உண்மையான இரு திருடர்கள் யேசுவின் இரு புறத்திலும் வைத்து சிலுவையில் அறையப்பட்டார்கள். ஒருவர் யேசுவை நம்பியவர். “இறை சாம்ராஜ்ஜியத்தில் நீங்கள் சேரும் போது என்னையும் நினைப்பீர்களாக” என்று அவர் வேண்டுகின்றார்.

அப்பொழுது தான் சொர்க்கத்தில் அவரும் தன்னுடன் கூட இருக்கப் போவதாக அறிவிக்கின்றார் யேசுபிரான். இதிலிருந்து யேசுவின் அப்போதைய மனோநிலை புலனாகின்றது. தான் வெகுவிரைவில் சொர்க்கத்தில் இருக்கப் போவதை அவர் ஆணித்தரமாக நம்பினார். அதே நேரத்தில் மனம் திருந்திய பாவியைக்கூட இறைவன் ஏற்றுக் கொள்வார் என்ற திட நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஆத்மாவின் பயணம் இப்போது தொடர்கின்றது. அகந்தை அகற்றுதல், மன்னிக்கும் சிந்தை, திருந்திய குற்றவாளிக்கும் அருள் அருளும் மனோநிலை மேலும் அகந்தை அகற்றி மன்னிக்கும் சிந்தை மலரத் தொடங்கியவுடன் இறை நம்பிக்கை ஆணித்தரமாக ஆன்மீகப் பயணியின் மனதில் மலர்கின்றது. எந்தத் தவறைக்கூடச் செய்து அதன் பின் மனம் வருந்தி, மனதில் தன்னைத் தானே திருத்திக் கொண்டவர் கூட இறை அருளுக்குப் பாத்திரமானவர் என்ற சிந்தை அந்த மலர்ச்சியின் போது யேசுவினுள் மேலோங்குகின்றது. உண்மையான குற்றவாளி ஒருவர் கூட மனம் வருந்தி இறையருளைக் கேட்டால் நிச்சயமாக அது கிடைக்கும் என்பதை யேசு கிறீஸ்து இத் தருணத்தில் கூறி வைக்கின்றார். பாவிகளையும் இரட்சிக்கும் சிந்தை இப்போது பரிணமிக்கின்றது. அடுத்து அவர் கூறுவது – “அதோ உன் மகன்; உன் தாய்” என்பது.

அவர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சொட்ட இருக்கின்றார். அவர் முன்னிலையில் தாயார் மேரியும் அவரின் மிக நெருங்கிய சீடன் யோகானும் (துழாn) நிற்கக் காண்கின்றார். அவர்களை அவர் அறிமுகப்படுத்துகின்றார். “அம்மா! இதன் பின் உன் மகன் இவனே!” “சீடரே! இதன் பின் உன் தாய் இவரே” என்று கூறுகின்றார். இவர்களை அறிமுகப்படுத்தும் போது வெறுமனே தாய் – மகன் என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தவில்லை. இருவருமே இறை பக்தி கொண்டவர்கள், இறைவனின் நெறிப்படுத்தலில் வாழ்பவர்கள் என்பதை உணர்ந்தே அறிமுகப்படுத்துகின்றார்.

அவர்கள் தாயும் மகனும் ஆக வாழ வேண்டியவர்கள் என்ற முறையிலேயே இவ்வாறான கருத்தை யேசுபிரான் வெளியிடுகின்றார். யேசுபிரானின் பயணம் ஒவ்வொரு ஆத்மாவின் ஆன்மீகப் பயணத்துக்கு ஒப்பானது என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

தற்போது ஆத்மாவின் பயணத்தில் செல்லும் நபரின் சிந்தை யாவரையும் உள்ளடக்கும் ஒரு தெய்வீக நிலைக்குச் செல்கின்றது. யாவரும் கேளிர் என்ற ஒரு பரந்த நிலையை மனம் அடைகின்றது. அதாவது இறைபக்தி கொண்டவர்கள் இறைவழி பயணிப்பவர்கள் அனைவரும் எனது உறவினரே என்ற எண்ணம் மேலோங்குகின்றது.

இப்போது அடுத்த கட்டத்திற்குப் போகின்றது ஆத்மாவின் பயணம்.

  1. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்!
  2. தாகமாயிருக்கின்றேன்
  3. முடிந்தது
  4. பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன்.

நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் கூற்றுக்கள் மர்மம் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. தனது பயணத்தில் ஆத்மாவானது முதலில் சுற்றாடலில் இலயித்து ஆவன செய்து முன்னேறியது. அதாவது அது மன்னித்தது; திருந்திய பாவிகளையும் ஏற்றுக் கொண்டது. இறை அன்பில் இலயித்தவர்களை அடையாளம் காட்டி இறைவழி செல்ல உதவியது. இவையாவும் சுற்றாடலுடன் தொடர்புடையன.

அடுத்து கூறப்படும் கூற்று யேசுவின் அல்லது ஆத்மாவின் பயணம் எங்கு செல்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எமது தற்போதைய அனுபவங்கள் புலன் வழியிலான அனுபவங்கள். யேசுவின் முதல் மூன்று கூற்றுக்களும் புலன் வழி அனுபவத்தின் போது எழுந்த கூற்றுக்கள். அடுத்து செல்லவிருப்பது புலன் வழிக்கு அப்பாலான ஒரு பரிணாமத்திற்கேயாகும். புலன்வழி வாழ்க்கை முடியும் தறுவாயில் ஒவ்வொரு ஆன்மாவும் கூறப் போவது இதைத்தான் –

“தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று.

உடல் ரீதியான வேதனையால் அவர் இதைக் கூறவில்லை. உடல் ரீதியான வேதனைகளை இப்போது ஆன்மா கடந்து நிற்கின்றது. ஆன்மாவானது ஒரு வெறுமை நிலைக்கு வந்துவிட்டது. இந்துக்களின் படி கைவல்ய நிலையை ஆத்மா அடைந்துவிட்டது. புலன் ஊடான செயற்பாடுகள் முடிந்துவிட்டன. தற்போது ஆன்மா வெறுமையில் நிற்கின்றது. எந்தவிதப் பற்றும் அற்ற நிலையை அடைந்துவிட்டது. உலக பந்தங்கள் இனி இல்லை என்ற நிலையில், அடுத்து வேறொரு பரிமாணத்தில் ஐக்கியமாகப் போகும் நிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. வெளிச்சத்தின் ஊடாக கையைப் பிடித்து வந்தவர் இப்போது கருமை நிறைந்த ஒரு இடத்தில் தன் கைபிடியைத் தளர்த்தி கருமைக்குள் தள்ளி விடுகின்றார் இறைவன். இதைச் “சூன்ய அவஸ்தை” என்று இந்து மதம் கூறுகின்றது. உடல், மனம், அறிவு ஆகிய புலன் உணர்வுகளைக் கடந்த, இன்னமும் பரத்தோடு ஐக்கியமாகாத நிலையே இந்த நிலை. அதுவரையில் புலன் ஊடாக இறைவனை நுகரும் ஒரு நிலை இருந்து வந்தது. தற்போது அது பறிபோய்விட்டது. இந்நிலையில் ஆன்மா தத்தளிக்கின்றது. “இறைவா! ஏன் என்னை கைவிட்டாய்” என்கின்றது. சூன்யத்தில் ஏற்படும் ஏக்கம் அது.

பல ஞானிகள் இந்த நிலைக்கு வந்த பின் யேசுவைப் போல்த்தான் ஏங்கிக் கூறியதாக நாம் காண்கின்றோம். இது பரம்பொருளில் ஆன்மா ஐக்கியமாவதற்கு முன்னரான நிலை. இந் நிலையைக் கடக்கும் போது ஏதோ ஒரு செயல்முடிவற்ற ஒரு ஏக்கம் ஏற்படுகின்றது. அதைத்தான் அடுத்த கூற்று குறிப்பிடுகிறது.

“தாகமாய் இருக்கின்றேன்.” என்கின்றது. ஆன்மா இப்போது பேரண்டத்துடன் ஐக்கியமாகப் போகும் நிலையை அடைந்துவிட்டது. ஆன்மா இந்த நிலையில் அடுத்த நிலைக்காகத் தாகமாய் இருக்கின்றது. இது உடலின் தாக நிலையன்று. ஆன்மாவின் தாகநிலை.

அடுத்த நிலைக்கு வந்ததும் “எல்லாம் முடிந்தது” என்கின்றது ஆன்மா. முதலில் பிரிந்திருந்த ஒரு நிலை. அதன் பின் இறைவனுடன் ஐக்கியமாகத் தாகம் எடுத்த நிலை. ஏக்கம், தாகம் போன்ற நிலைகளைத் தாண்டியதும் “எல்லாம் முடிந்தது” என்ற நிலையை அடைகின்றது ஆன்மா. கடைசியாகத் தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புவிக்கும் நிலையில் “பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்” என்கின்றார். அத்துடன் அவரின் உயிர் பிரிகின்றது. இறைவனுடன் ஐக்கியமாகும் நிலையில் “தான்” என்ற நிலையைக் கடக்கின்றது ஆத்மா

முதல் மூன்று கூற்றுக்களும் புலன் உலகத்திற்குச் சொந்தமானவை. அடுத்த நான்கு கூற்றுக்களும் புலன் கடந்த நிலையில் கூறப்பட்டவை. இவை ஒவ்வொரு ஞானியும் தனது ஆன்மீகப் பயணத்தில் முகம் கொடுக்கும் நிலைகள். இவற்றை மிக அழகாக இயேசு கிறீஸ்து வெளிக் கொண்டு வந்தார் என்பது இந்துக்களின் மகிழ்ச்சி. இது பற்றி கிறீஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு ஒன்றில் மட்டுமே. இந்த நிலைகளை யேசுபிரான் மட்டுமே கடந்தார் என்று கிறீஸ்துவம் நம்புகின்றது. பல ஞானிகள் இந்த நிலைகளைக் கடந்தது பற்றி இந்து மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே குறித்த ஞானிகளுள் ஒருவராக யேசு கிறீஸ்துவை ஏற்பதல் இந்துக்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

ஆகவே உயிர்ப்பு ஞாயிறு என்பது நாம் எமது “தான்” என்ற நிலையை சிலுவையில் அறைந்து இறைவனுடன் ஐக்கியமாகி திரும்பவும் மீட்டெழுச்சி பெறுவதாகும். அதனை யேசுகிறீஸ்துவின் வாழ்க்கையில் நாம் காண்கின்றோம். அதே விதமான ஒரு பயணத்தை எல்லா ஞானிகளின் ஆன்மாக்களும் பயணிக்கின்றன. ஆனால் யேசுவின் சிறப்பே அவரின் மீட்டெழுச்சி தான். அதுவே உயிர்ப்பு ஞாயிறு.

Tamil News