சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு

srikantha சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் - சிறீகாந்தா தெரிவிப்பு“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். இந்த விடயத்தில் சம்பந்தன் ஒரு செல்லாக்காசு” என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி
என்.சிறீகாந்தா.

தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடா்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சிறீகாந்தா, “பொது வேட்பாளர் விடயத்தில் நாங்கள் ஓர் உறுதியான முடிவில் இருக்கிறோம். தமிழ்த் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பொது வேட்பாளர் நிச்சயமாக ஓர் அரசியல் கட்சி சார்ந்தவராக அல்லது அரசியல் கலப்பு உள்ளவராக இருக்கமாட்டார். இந்த விடயத்தில் நாங்கள் மிகஅவதானமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டாா்.

“பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்கள் தயார் என ஏற்கனவே அறிவித்திருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும், அனந்திக்கும் நிச்சயமாக இந்த வாய்ப்புக்கிட்டாது. பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கும் தராதரத்தின் அடிப்படையில் பலர் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயத்தில் சரியான நேரத்தில் – சரியான தீர்மானங்களை நாங்கள் மேற்கொள்வோம். சிவாஜிலிங்கத்துக்கும் அனந்திக்கும் இப்போது இந்த விடயம் தேவையற்றது” என்றும் rிறீகாந்தா தெரிவித்தாா்.

“சுமந்திரன் பொது வேட்பாளர் விடயத்தை முற்றுமுழுவதுமாக எதிர்க்கிறார். அதற்குக் காரணம் உண்டு. சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு அவர் தலைமையிலான அணி முடிவெடுத்து விட்டது. அது எப்போதோ முடிந்தவிடயம். அதனை நான் உறுதியாகக் கூறுவேன். இந்த விடயத்தில் தலைவர் சம்பந்தன் இப்போது ஒரு செல்லாக்காசு. அவரால் எதையும் செய்யமுடியாது” என்றும் சிறீகாந்தா மேலும் தெரிவித்தாா்.