இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுள்ளிட்ட பிராந்தியப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோர் ஆகியோருக்கு இடையிலான உயர்மட்டச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தூதுவர் செர்ஜியோ கோர், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பிராந்தியத்தில் நிலையான பொருளாதாரப் பாதைகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



