அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கை இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறும் செயல் என்றும் அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் குடியரசு குறைந்தது நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு ட்ரோன், மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க ஒரு சரக்குக் கப்பலின் மேல் தளத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அது தனது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எஞ்சிய மூன்று ட்ரோன்களை எங்கள் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இது நிச்சயமாக எங்களின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறியுள்ளதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் குறிப்பிட்ட கப்பலின் பெயரைத் தனது பதிவில் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தைவானைச் சேர்ந்த பிரபல கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்க்ரீன் மெரைன் இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கமளித்துள்ளது. தங்களுக்குச் சொந்தமான, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த எவர் லவ்லி என்ற கன்டெய்னர் கப்பல், ஓமன் கடற்பரப்புக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சென்றபோது அடையாளம் தெரியாத பொருள் ஒன்றால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.



