பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றப் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவியும், அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நேற்று (25) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்து விசேட சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இச்சந்திப்பில் இலங்கை காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய துறைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, அநுராதபுர சிறுமியின் விவகாரத்திற்கு மேலதிகமாக, நாட்டில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் முழுமையாகத் தடுப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

அநுராதபுர சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களை இனங்காண்பதற்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் விசேட உபகுழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரத்தில் குறித்த சிறுமியை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரருக்கு எதிராக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.