மியான்மருக்கு அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்தங்கள்: மலேசியாவை வலியுறுத்தும் ஐ.நா. 

269 Views

கடந்த இரண்டு மாதங்களாக மலேசியாவில் தஞ்சம் கோரிய பல மியான்மர் அகதிகளை மலேசியா நாடு கடத்தி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அகதிகளை நாடுகடத்துவதை நிறுத்துமாறு மலேசிய அரசை ஐ.நா. அகதிகள் முகமை வலியுறுத்தியுள்ளது.

“கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தங்களது விருப்பத்துக்கு மாறாக நூற்றுக்கணக்கான மியான்மர் நாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இடங்களுக்கு மக்களை திருப்பி அனுப்ப முடியாது,” என ஜெனிவாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஐ.நா. அகதிகள் முகமையின் பேச்சாளர் ஷபியா மன்டூ தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் மலேசியாவில் தஞ்சம் கோரிய மியான்மரின் முன்னாள் கடற்படை அதிகாரிகளும் உள்ளடங்குவர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2,000 த்திற்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்களின் தஞ்சக்கோரிக்கையை எவ்வித பரிசீலனையுமின்றி நிராகரித்து அவர்களை மலேசியா நாடுகடத்தியிருக்கிறது. இதில் சுமார் 1,000 த்திற்கும் மேற்பட்டவர்களை கடந்த இரண்டு மாதங்களில் நாடுகடத்தியிருக்கிறது. இப்படியான எவ்வித பரிசீலனையுமற்ற நாடுகடத்தலை மலேசிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவில் 185,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 1 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிந்திருக்கின்றனர்.

அத்துடன் 17,500 பேர் மலேசியாவில் உள்ள 21 குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் எனக் கூறப்படுகிறது.

மலேசியாவில் உள்ள அகதிகளை நிர்வகிக்கும் பொறுப்பினை அண்மையில் மலேசிய அரசு கையில் எடுத்தது. இதைத் தொடர்ந்து மலேசிய அரசுக்கும் ஐ.நா. அகதிகள் முகமைக்கும் முறுகலான நிலை நீடித்து வரும் சூழலில், குடிவரவுத் தடுப்பு முகாம்களை பார்வையிட ஐ.நா.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலைமையின் அடிப்படையில், மியான்மர் அகதிகளை நாடுகடத்தும் மலேசியாவின் நடவடிக்கை தொடரும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply