இலங்கையின் காலி மாவட்டத்தில் உள்ள ஹபாராடுவ பகுதியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற 45 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தேடுதல் நடத்திய போது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு வருகைக்காக இவர்கள் அனைவரும் விடுதியில் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் கைதான 45 பேரில் 35 பேர் ஆண்கள், 07 பேர் பெண்கள், 03 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என இலங்கை கடற்படை தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், வெண்ணப்புவ மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையானது முதல் இதுபோன்ற தஞ்சக்கோரும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
“இலங்கையிலிருந்து (படகு வழியாக) அவுஸ்திரேலியாவை அடைய 21 நாட்களாகும். கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்த ஆட்கடத்தல் படகுகளையும் நாங்கள் தடுப்போம். அதில் வருகிறவர்களை புறப்பட்ட இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ அல்லது பிராந்திய பரிசீலனை (மையம் உள்ள) நாட்டுக்கோ அனுப்பி வைப்போம்,” என அவுஸ்திரேலிய எல்லைக் கட்டளைத் தளபதி ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் நடைபெற்ற ஆசிய கடலோர காவல்படைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இக்கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
“அவுஸ்திரேலிய அரசாங்கம் மாறியிருக்கலாம், ஆனால் சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கை மாறவில்லை,” என அவர் தெரிவித்திருக்கிறார்.