மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மயானத்திற்குரிய காணி உட்பட 60 ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களுடைய காணிகளை அபகரித்து அப்பகுதியில் கடற்படை முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட உள்றாட்டு யுத்தம் காரணமாக 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்கரைச்சேனை உள்ளிட்ட பல கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். பின்னர் மீண்டும் மீள குடியமர்த்தப்பட்டபோது குறித்த காணிகள் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகவும் அதன்பின்னர் இது தொடர்பாக மூதூர் பிரதேச செலகத்தில் கூட்டம் நடைபெற்று வந்ததாகவும் அதில் குறித்த காணிகளை குறித்த கடற்படை முகாமிற்கு வழங்குமாறும் அதற்காக இழப்பீடு தருவதாகவும் தெரிவித்ததோடு இழப்பீடு வேண்டாம் காணிதான் வேண்டும் என கூறியபோது பாட்டாளிபுரம் பால் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் காணி தருவதாக கூறியதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் கடற்கரைச்சேனை மண் மிகவும் வளமான மண் என்பதால் தமது பகுதியில் எங்கேயாவது மாற்றுக் காணி வழங்குமாறு காணி இழந்த மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அப்பகுதியில் அரச காணி இல்லையென அரச தரப்பில் இருந்து பதில் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் 11 பேருக்கு சொந்தமான தனியார் காணிகளை பரகும்பா கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கப்படவுள்ளதாக மூதூர் பிரதேச செயலாளரினால் 23.10.2024 அன்று எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டோர் தமது எதிர்ப்பினை எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும், எதிர்வரும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமது பிரச்சினை ஆராயப்பட்டு சரியான தீர்வு பெற்றுத்தர வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.