கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை இராணுவம் கூட்டு: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை

461 Views

706219 கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை இராணுவம் கூட்டு: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு எச்சரிக்கை

கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்துடன் இலங்கை இராணுவம் கூட்டு வைப்பதால், தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இலங்கை அரசு கடந்த ஜனவரி மாதம் இராணுவத்தின் 5 பட்டாலியன்களைக் கொண்டு 28 அதிகாரிகள், 725 படை வீரர்கள் கொண்ட 3 குழுக்களை உருவாக்கி உள்ளது.

இக்குழு மூலம் இந்தியாவில் வேளாண்மையில் கால்பதித்து இந்திய வேளாண்மையின் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் முதலீடுகள் செய்ய, மறைமுக முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இலங்கைத் தூதர் வெங்கடேஷ் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக, திருச்சி பகுதியில் உள்ள கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை இலங்கை சார்ந்த முக்கிய தலைவர்களுக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

தமிழகத்தின் மையப் பகுதியாக உள்ள திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விளைநிலங்களில் வேளாண் தொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள், உர உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வரும் கோத்தாரி சுகர்ஸ்  நிறுவனத்துடன், இலங்கை இராணுவம் கூட்டு பங்கு வைப்பதால், எதிர்காலத்தில் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படலாம்.

விளக்கம் கேட்க வலியுறுத்தல்

எனவே, தமிழகத்தில் வேளாண் துறையில் கால்பதிக்க தமிழக அரசு அதற்கான அனுமதியை இலங்கைக்கு வழங்கி உள்ளதா? இலங்கை தூதர் வெங்கடேஷ் நேரடியாக கோத்தாரி நிறுவனத்தை பார்வையிட்டு பேரம் பேசுவதற்கு தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளாரா? தனது நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளாரா என்பதை விளக்க வேண்டும்.

எனவே, தமிழகத்தின் நலன், பாதுகாப்பு கருதி தமிழக முதல்வர், வெங்கடேஷை அழைத்து உரிய விளக்கம் கேட்க வேண்டும். கோத்தாரி நிறுவனத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, அனைத்து விவரங்களையும் அரசு கேட்டறிய வேண்டும்.

அரசின் அனுமதி இல்லாமல் கோத்தாரி நிறுவனம் இலங்கை ராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து, பங்குகளையும் விற்பனை செய்திருந்தால், அதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுத்து, தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நன்றி – இந்து தமிழ் திசை

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply