பயங்கரவாத தடைச் சட்டத்தை நீடிக்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாக சிறிதரன் சாடல்!

அமுலில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காகவே, அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவது போல் செயற்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்களும் கொள்கைகளும் ஒன்று தான் என்பதை அநுர அரசும் இப்போது நிரூபித்து இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உலகத்திடம் மறைப்பதற்காக அவர்களுடைய காணிகளை இன்னும் விடுவிக்காமல், அரசியல் கைதிகளை இன்னும் விடுவிக்காமல், அவர்களது நிலங்களில் புத்த விகாரைகளை அமைத்துக் கொண்டு வரலாற்று வன்முறை ரீதியான நிகழ்வில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் சாடினார்.

ஏற்கனவே 47 வருடங்களாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்திருக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அதனை இன்னமும் தக்க வைப்பதற்காகவே உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.