நீண்ட சட்டப் போராட்டம்: இந்திய மக்களவை தேர்தலில் வாக்களிக்கின்றார் ஈழத் தமிழ் பெண்

2 1 நீண்ட சட்டப் போராட்டம்: இந்திய மக்களவை தேர்தலில் வாக்களிக்கின்றார் ஈழத் தமிழ் பெண்இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன், தனது கனவு நனவாகியிருப்பதாகவும் தற்போது தான் ஒரு இந்தியன் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியிருக்கும் நளினி கிருபாகரன், கடந்த 1986 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் அவர் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த போது, அது மறுக்கப்பட்டது. இதனால், நளினி கிருபாகரன் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார். மண்டபம் பகுதியில் அவர் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ் வைத்திருப்பதால், நளினிக்கு இந்திய கடவுச்சீட்டினை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதாவது, இந்திய குடியுரிமைச் சட்டம் 1995 இன் படி, 1950 ஜனவரி 26 முதல் 1987ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் பிறக்கும் எவரும் இந்திய குடிமகனாவார் என பிரிவு 3 வரையறுக்கிறது. அவருக்கு கடவுச்சீட்டு கிடைத்த பிறகும், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதியின் பேரில், அகதி  முகாமிலேயே தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இந்த வாரத் தொடக்கத்தில் நளினிக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இந்த உரிமை, தன்னுடன் முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். பல ஆண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு தனது வாக்கினை செலுத்தப் போவதாக நளினி கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவில் பிறந்த தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் நளினி குறிப்பிட்டுள்ளார்.