இலங்கை-அனுராதபுரம் வைத்தியசாலையில் பாரியளவு மருந்து தட்டுப்பாடு

193 Views

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு பாரியளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் புற்று நோயாளர்களும் சிறுநீரக நோயாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்களுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பல மருந்துகளை வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பெரும்பாலானோர், பணம் செலவழித்து, வெளியில் இருந்து மருந்து வாங்கும் பொருளாதார நிலையில் இல்லாததால், தற்போதுள்ள விலையில், பாமசிகளில் மருந்து வாங்க முடியாமல், பலர் உள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் கூட கிடைக்கவில்லை என வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் துலான் சமரவீர கூறுகையில், மருந்துகளை கொள்வனவு செய்வதில் வைத்தியசாலை பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளுக்கு தேவையான மருந்தை வாங்க முடியாமல் தவிக்கும் தந்தை ஒருவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது, ​​“எனது மகள் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மருத்துவமனையில் கிடைக்காத மருந்துகளை வெளியில் வாங்கி வர பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து பாமசியில் 95,000 ரூபாய். “இன்று ஒரு வேளை சாப்பிட முடியாமல் இருக்கும் எமக்கு இந்த மருந்து வாங்க எங்கே பணம் எங்கிருந்து, நிலமை மிகவும் மோசமாக இருக்கிறது என கூறுகிறார்.

Leave a Reply