இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் 40 சிறுவர்கள் பலி – ஐ.நா

இந்த வருடத்தில் மட்டும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸதீனப் பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 40 இற்கு மேற்பட்ட பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்துலக விதிகளை மீறி இஸ்ரேலியப் படையினர் மிகவும் மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறுவர்கள் உட்பட பெருமளவான பலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என அதன் ஆணையாளர் மிசேல் பசெலெற் கடந்த வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

பெருமளவில் சிறுவர்கள் கொல்லப்படுவது வேதனையானது, அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த வாரம் மட்டும் 19 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேலிய படையினர் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பல கட்டிடங்களை தரைமட்டமாக்கியதுடன், அகதி முகாம்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜிகாத் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துவருகின்றபோதும், பொதுமக்களே அதிகம் கொல்லப்பட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (5) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 17 சிறுவர்கள் உட்பட 22 பேர் பொதுமக்கள் நான்கு பெண்களும் அடங்குவர்கள். 360 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொதுமக்கள். காயமடைந்தவர்களில் 158 சிறுவர்களும், 58 பெண்களும் 19 முதியோரும் அடங்குவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.