இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலுரிமை’ மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான ‘மகாசாகர்’ ஆகிய முக்கியக் கொள்கை முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை மிகமுக்கியமான பங்காளி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் முன் அவர் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக புதுடெல்லியிலிருந்து இலங்கை புறப்படுகிறேன். இந்த விஜயத்தின் போது இலங்கைத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்நோக்கியுள்ளேன். மேலும், இலங்கையில் வாழும் துடிப்பான இந்தியச் சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளேன்.
நமது நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் ஆழமான வரலாற்று, நாகரிகத் தொடர்புகளுக்கு அப்பால், ‘அண்டை நாடுகளுக்கு முதலுரிமை’ மற்றும் ‘மகாசாகர்’ ஆகிய முன்னெடுப்புகளின் கீழ் இலங்கை நமது மிக முக்கியப் பங்காளிகளில் ஒன்றாகும்.” என அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



