இலங்கை- அமைச்சர் பொறுப்பில் இருந்து தம்மிக்க பெரேரா விலகல்

இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (10) அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாட்டின் மீது கொண்டுள்ள அளப்பரிய நேசத்தை கருத்திற்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றதாக கூறியுள்ளார்.

ஆனால், “பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை ஒரு தீர்வை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று நான் இப்போது கருதுகிறேன்,” என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனக்  கோரி நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர். கோட்டா கோ கம போராட்ட களமும் போராட்டக்காரக்களால் நிரம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.