பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹியன்சி அரசகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்று நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாத தொடக்கத்தில் பொதுமக்களின் கருத்தையும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களையும் பெற நடவடிக்கை எடுக்கவும், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களையும் பெறவும் அந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நீதி அமைச்சில் நடைபெற்றது.
புதிய சட்ட முன்வரைவு உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்துக்கான மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் அந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.