பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவைச் செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.
டித்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான உறவுகளை எடுத்துரைத்து இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் முக்கிய சந்தையாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைப்பாடுகளைக் காண்காணிப்பதற்கான வலுவான திட்டங்கள் மூலம் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்கும் அதேநேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை இலங்கை தொடர்ந்தும் உறுதிசெய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
GSP+ சலுகை மூலம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நிலையான வர்த்தக வாய்ப்புகள் மூலம் இலங்கையின் தொழில்துறைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், இலங்கையில் தமக்கு வழங்கிய சிறப்பான உபசாரத்திற்கு பாராட்டைத் தெரிவித்த வலினா பௌலி ககன், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதில் பிரான்ஸ் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீர் சுத்திகரிப்புத் திட்டம், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் ஆடைத் தொழில்துறைக்கு ஆதரவளிப்பதில் காணப்படும் ஆர்வம் உள்ளிட்ட விடயங்களையும் இத்தூதுக் குழுவினர் வெளிப்படுத்தினர்.



