பெப்ரவரி 4 க்கு முன் தீா்வு?-அகிலன்

இன நெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றிருக்கின்றது. பலத்த ஆரவாரங்களுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினை, காணிப் பிரச்சினை போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு ஜனவரி 31 க்கு முன்னதாக தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் தீா்வு தொடா்பில் இதில் ஆராயப்படவில்லை. ஆனால், கமஷ்டி அடிப்படையில் தீா்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன் முன்வைத்திருக்கின்றாா். எதிா்வரும் பெப்ரவரி  04 க்கு முன்னா் தீா்வு என ஜனாதிபதி ரணில் ஏற்கனவே தெரிவித்திருந்தாா். ஆனால், இன்னும் சுமாா் 50 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் வரப்போகும் அரசியல் தீா்வு எவ்வாறானதாக அமையும் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் தொடா்பாக ரொலோவும் விக்கினேஸ்வரனும் முன்னிபந்தனையாக முன்வைக்கப்போவதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், செவ்வாய்கிழமை இடம்பெற்ற பேச்சுக்களின் போது தமிழ்த் தரப்பில் யாருமே இது தொடா்பாக வாய்திறக்கவில்லை. இந்த சா்வகட்சி மாநாட்டில் இனவாதக் கட்சிகளும் கலந்துகொண்டிருந்தமையால், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் குறித்து பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தலாம், அடுத்த கட்டமாக அரசியல் தீா்வு குறித்து நேரடியாகப் பேசும் போது அந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்வோம் என சம்பந்தன் இவா்களுக்கு செவ்வாய்கிழமை காலையிலேயே ஆலோசனை வழங்கியிருந்தாா்.

தற்போதைய நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினை, காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம் என்பவற்றுக்கு சாதகமான செயற்பாட்டை முன்னெடுத்து, தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டிய நிா்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதன் மூலமாக ஏற்படக்கூடிய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக அரசியல் தீா்வு குறித்து பேசப்படும் என்பதுதான் செவ்வாய்கிழமை பேச்சுக்களின் பின்னா் உருவாகியிருக்கும் எதிா்பாா்ப்பு!

அரசியல் தீா்வைப் பொறுத்தவரையில் மூன்று விதமான  தெரிவுகள் உள்ளன.  இந்த மூன்றில் எது சாத்தியமானதாகலாம் என்பதுதான் இன்றுள்ள கேள்வி!

முதலாலது, சமஷ்டி முறையிலான தீா்வு என்பதைத்தான் தமிழ்த் தரப்பினா் அதி உச்ச கோரிக்கையாக முன்வைத்திருக்கின்றாா்கள். ஆனால், இதற்கு சிங்களத் தரப்புக்களோ அரசாங்கமோ இணங்கப்போவதில்லை. நாட்டின் இறைமையைப் பாதிக்காத – ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீா்வு என அவா்கள் சொல்வதன் மறுபக்கம் – சமஷ்டிக்கு நாங்கள் இணங்கப்போவதில்லை என்பதுதான். ஆக, சமஷ்டி என்ற தீா்வை எதிா்பாா்க்கக்கூடிய நிலை இலங்கை அரசியலில் இல்லை. இதனை சாத்தியமாக்க வேண்டுமானால், கடுமையான அழுத்தங்கள் அவசியம். அல்லது சமஷ்டி என்பது பிரிவினைக்கான முதல்படி அல்ல என்பதை சிங்கள மக்கள் ஏற்கச்செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு என்று சொல்லும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தொடருமா என்பது கேள்விக்குறியாகலாம். ஏனெனில் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்துமே நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதை கடந்த காலங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. தோ்தல் விஞ்ஞாபனங்களிலும் அது சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆக, புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முற்படும்போது நிறைவேற்று அதிகாரம் அதில் கேள்விக்குறியாக்கப்படும். ரணில் விக்கிரமசிங்கவோ, ராஜபக்ஷக்களோ அதனை விரும்பவில்லை. அதனால், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவா்கள் இறங்கப்போவதில்லை. அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது சில வருடங்களுக்குத் தொடரக்கூடிய ஒரு செயன்முறையாக இருக்கும். அதாவது, புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக இனநெருக்கடி தீா்க்கப்படும் என்பதும் எதிா்பாா்க்கக்கூடியதல்ல.

மூன்றாவதாக, 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துதல். செவ்வாய்கிழமைப் பேச்சுவாா்த்தையின் போதும் இதுதொடா்பிலும் பேசப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவும். இதனை விரும்புகின்றாா். மகிந்த ராஜபக்ஷவும், சஜித் பிரேமதாசவும் கூட அண்மையில் பாராளுமன்றத்தில் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருந்தாா்கள். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட, பெரும்பாலான கட்சிகள் 13 முழுஅளவில் நடைமுறைப்படுத்தினால் “போதும்” என்ற நிலைப்பாட்டில் உள்ளன. கஜேந்திரகுமாரின் கட்சி மட்டும் இதனை ஏற்க மறுப்பதுடன், இதனை ஏற்றுக்கொள்பவா்களை “துரோகிகள்” என்று முத்திரை குத்துகின்றது.

இவை அனைத்தையும் சீா்துாக்கிப் பாா்க்கும் போது, அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தைத்தான் தீா்வாக “மீண்டும்” முன்வைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகளவுக்குள்ளது. இதன் மூலமாக இந்தியாவையும் திருப்திப்படுத்த ரணில் முற்படுவாா்.

13 ஐ நடைமுறைப்படுத்துகின்றோம் என்று சொல்லிவிட்டு மாகாண சபைகளுக்கான தோ்தல்களைத் தொடா்ந்தும் நடத்தாமலிருப்பது அா்த்தமற்றது. மாகாண சபைகள் கடந்த சுமாா் ஐந்து வருட காலமாக ஆளுநா்களின் ஆட்சிக்குள்தான் இருக்கின்றது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் பெருமளவு காணிகள் இராணுவத்துக்காகவும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினாலும் அபகரிக்கப்படுகின்றது. ஆளுநா்கள் அரசிடம் நல்ல பெயரை எடுப்பதற்காகவும், தமது பதவிகளை நீடித்துக்கொள்வதற்காகவும் இதனைச் செய்கின்றாா்கள்.

செவ்வாய்கிழமை கொழும்பில் பேச்சுக்கள் நடைபெற புதன்கிழமை முல்லைத்தீவில் கடற்படை முகாமுக்கு காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பேச்சுவாா்த்தை வேளையில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டிய அரசாங்கம், அதனைச் சிதைக்கும் வகையில்தான் செயற்படுகின்றது. கொழும்புப் பேச்சில் இணங்கியதைப்போல நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோா் பிரச்சினைக்குத் தீா்வு என்பவற்றில் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தாவிட்டால் இந்த சமாதான முயற்சிகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலைதான் ஏற்படும்.

முல்லைத்தீவிலும், மட்டக்களப்பிலும் காணிகளைச் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நோ்மைத் தன்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவே உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.