பெண்களின் படைப்பாளுமையின் தொன்மையின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை போற்றும் திருப்பாவை திருவெம்பாவை

தமிழிலக்கியத்தில் பெண்களின் ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்தவை பெண்கள்  ஆட்சியாளர்களாக விளங்கிய தாய்வழிச்சமுதாய அமைப்பின் தொன்மையின் தொடர்ச்சியான நீராடல் மரபாகத் திருப்பாவையாகவும் திருவெம்பாவையாகவும் இன்று வரை நீட்சி பெற்றுக் காட்சி அளிக்கின்றன.

இந்தத் தொன்மையான பெண் நீராடல் மரபில் சங்ககாலத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமானமான மனிதநிலையில் மகிழ்ந்திருந்த மனித சமத்துவகால வாழ்வியலின் காட்சிகளைச் சங்கப்பாடல்கள் அற்புதமான பாடல்களாகக் மனதில் இன்றுவரை காட்சிப்படுத்துகின்றன.

ஆண்பெண் சமத்துவ நிலையில் யாவரும் காணக் கடற்கரைகளில் கடலாடு பெண்களின் விளையாட்டு மரபினை காட்சியினை’ துறையாடு மகளிர்க்குத் தோட் புணையாகிய பொருபுனறரூம் போக்கரு மரபின்’என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகள் எம் கண்முன் நிறுத்துகின்றன. இன்று நான் வாழும் ஒக்ஸ்வேர்ட்டில் கோடைகாலங்களில் ஆற்றில் ஆண் பெண்ணாக இளையவர்கள் மரக்கொப்புகளில் இருந்து ஆற்றில் பாய்ந்து தோழமையுடன் பால் பேதங்கள் கடந்து கைகளை இணைத்து நீந்தி எழும் காட்சிகளைக் காணும் பொழுது இந்த தன்னையே தன்னளவில் கட்டுப்படுத்தும் வாழ்வியல் முறை சங்கத்தமிழ் உலகுக்குத் தந்த கொடையாக என சங்கத் தமிழ்ப்பாடல்கள் நினைவுக்கு வரும்.

பெண்களின் உள்ள உறுதியும் உடற்பலமும் கூடிவிளையாடும் எந்த இளைஞர்களுடனும் பாலியல் வேறுபாட்டைக் கடந்து அச்சமின்றிக் கைகோர்த்துப் பழகும் அளவுக்கு அவர்களுக்குச் சங்கத் தமிழ் வாழ்வில் இருந்தது என்பதை ‘கை, மெல்லிதி னொதுங்கிக் கையெறிந்து கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப’
என்னும் மதுரைக்காஞ்சி வரிகள் எடுத்து விளக்குகின்றன. கல்லா மாந்தரொடும் நகுவனர் என்ற சொல்லாட்சி எத்தகைய மனிதஅறிவு நிலையிலும் தன்னைக் காத்து அவர்களையும் காக்கும் உள்ள உறுதியுடன் மகிழ்ந்து விளையாடும் உடற்பலமுள்ளவர்களாக வீரத்தமிழ்ப் பெண்கள் இருந்தனர் என்பதற்கு மொழிவழிச் சான்றாக உள்ளன.

‘நுரைத்தலைக் குரைபுனல் வரைப்பகம் புகுதோறும் புனலாடு மகளிர் கதுமெனக் குடைய’ என்னும் பொருநராற்றுப்படை வரிகள் நுரைத்தெழும் அளவுக்கு கரையொடு அலைமோதும் குளங்களில் உயரத்தில் இருந்து வேகமாகப் பாய்ந்து விளையாடும் பழக்கம் இளமகளிர் வழக்கமாக இருந்தது என்பதை எடுத்து விளக்குகின்றன.

 புனல் விளையாட்டில் ஆண் அணிந்துள்ள மலர் மாலையும் பெண் அணிந்துள்ள மலர்க் கோர்வைகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதும் அளவுக்கு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாகச் சமமாக நீராடி மகிழ்ந்தனர் என்பதை ‘ கலிகொள் சுமை யொலி கொளாயம் ததைத்த கோதை தாரொடு பொலிய புணர்ந்துடனாடு மிசையே யனைத்தும்’ என்னும் மதுரைக்காஞ்சிப்பாடல் சான்றுபடுத்துகிறது.

இவ்வாறாகப் பெண்கள் புனல் விளையாடுதல் என்பது தமிழ்ப்பெண்களின் இயற்கையோடான பொழுது போக்காகவும் அமைந்தது. இதனை குறிஞ்சிப் பாட்டில் வரும்’அவர்துகில் புரையும் மவ்வெள் ளருவித் தவிர்வில் வேட்கையேந் தண்டாதாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவழி நளிபடு சிலம்பிற் பாயம் பாடி’
என்னும் வரிகள் உறுதி செய்கின்றன. இப்பாடல் வரிகள் ‘செறிவுண்டான மலையிடத்துப் பளிங்கை கரைத்துச் சொரிந்து வைத்தாற் போன்று பரந்த சுனையைக் குடைந்து தாழ்வில்லாத உள்ளத்தோடு ஆடுவோம்  உள்ளங்களிக்கப் பாடுவோம்’ என புனலாடும் பெண் கூறுவதாக அமைகிறது.

பெண்கள் ஆற்றங்கரை குளத்தங்கரைகளை நோக்கிக் கூட்டமாகச் சென்று புனலாடும் பழக்கம் சங்ககால வழக்கம். இதனை
கூந்தலிடத்து ஆம்பலினது புற இதழ் ஒடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி அப்புனல் விளையாட்டைச் செய்யப் பெண்கள் செல்வர் என்பது குறுந்தொகைப்பாடல் வழி அறியக்கூடிய செய்தியாக அமைகிறது.

தமிழ்ப்பெண்களின் இயற்கையோடு இயைந்த இந்தப் புனலாடு விளையாட்டுத்தான் தைநீராடல் என்பதை நற்றிணையில் பூதன் தேவனார் மருதத்திணைப்பாடலாக, தலைவன்,  தலைவி தன்னைச் சந்திக்க மறுக்கும் நிலையில் அவனே அவளால் தனக்கு ஏற்பட்ட காதல் நோய்க்கு மருந்து எனத்தன் துயரத்தை எடுத்து விளக்கியமையை விளக்கும் பொழுதே தைநீராடல் என்னும் சொல்லாட்சியை முதன் முதலில் பதிவு செய்கின்றார்.

‘மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம்பாற்பயம் கொண்மார், கன்றுவிட்டு,
ஊர்க்குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து
தழையுந் தாரும் தந்தனன், இவன், என
இழைஅணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத்திங்கள் தண்கயம்படியும்
பெருந்தோட் குறுமகளல்லது
மருந்து பிறிதில்லை, யான் உற்ற நோய்க்கே
என்பதே பூதன்தேவனாரின் அப்பாடல்.

வீட்டின் தொழுவிடத்தில் உள்ள எருமைகளில் அகன்ற தலையினை உடையதாகிய காரெருமையின், இனிய தீம்பாலாகிய பயனைக் கறந்து பெறும் பொருட்டு, முதலில் கன்றினைக் குடிக்க விட்டுச் சிறிது நேரத்தில் கன்றை விலத்தி  பாலைக் கறந்ததம், சிறுவர்கள் அந்த காட்டெருமையின் மேலேறி விளையாடிக் கொண்டே அதனை மேய்ப்பதற்குக் கொண்டு செல்லும் அதிகாலை நேரம். அந்த நேரத்தில் பேரிருளை நீக்கும் விடியல் ஒளியில் தைநீராடலுக்குச் செல்லும் தலைவிக்கு நான் கொடுத்த தழை ஆடையும் மலர் அணிகளும் தந்தவன் இவன் எனத் தலைவி என்னைக் காட்டி மற்றைய பெண்களுக்கு நாணத்துடன் கூறிவிட்டு தண்ணீரில் பாய்ந்து தைநீராடும் உயர்ந்த தோள்களையும் ,வாயில் குறுநகையையும் உடைய. அவள் அல்லாது எனது இந்த நோய்க்கு வேறு மருந்தில்லை எனத் தலைவன் தனக்குத்தானே உரத்த குரலில் பேசி தோழிக்குத் தன் காதல் பிரிவின் துயர் தெரிவித்து அதனைத் தலைவிக்குச் சொல்லவைக்க எடுத்த இந்த முயற்சியை விளக்குகையிலே பூதன்தேவனார் தைநீராடல் பெண்கள் விருப்புடன் விளையாடிய விளையாட்டாக இருந்தமையையும் அந்நேரத்தில் காதலனிடம் அன்புப் பரிசில் பெறும் பழக்கம் இருந்தது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இவ்வாறு சங்ககாலப் பெண்கள் ஆண்களுடன் சமத்துவமாக உரிமைவழி உறவு கொண்டவர்கள். இந்த சமஉரிமைக்கு ஏற்பட்ட சமண பௌத்த வைதீகம் வழியான சரிவை தன் நாவால் தடுத்து நிறுத்தியவர் காரைக்காலம்மையார். இவர் தந்த தத்துவங்கள் வழி எழுந்தது பத்தி இலக்கியம். அந்த பத்தி இலக்கியத்தின் எழுச்சி அழைப்புக்களே திருப்பாவையும் திருவெம்பாவையும்.

சங்கத் தமிழ்ப்பெண்களின் தை நீராடல், பெண்ணுரிமையின் எழுச்சிகளை முன்நிறுத்தியது. அந்த எழுச்சியின் மகிழ்ச்சியில் ஒன்று கூடிய பெண்களின் மகிழ்நிலை விளையாட்டே புனல் விளையாட்டு என்னும் தைநீராடல். ஆண்டாளின் திருப்பாவைத் தமிழில், தைநீராடலை பெண்ணுரிமைக்கு காவலனாகத் தன்னால் ஆட்கொள்ளப்பட்டுத் தன்னில் விளங்கு மும்மூர்த்திகளில் காத்தல் தெய்வமான கண்ண பெருமானை  முன் நிறுத்தி, மாதங்களில் நான் மார்கழி என்ற அவனின் நினைவாக மார்கழி நீராடலாக மீள் உற்பத்தி செய்தது.

திருப்பாவையின் முதற்பாடல்
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமீனோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வ சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழியன் நந்தகோபன் குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து – ஏலோர் எம்பாவாய்
என்று தொடங்குகிறது.  திருப்பாவை வழி ‘தைநீராடலை;’  தமிழிலக்கிய மரபில் ;மார்கழி நீராடல்’ என்னும் சொல்லாட்சியாகப் புதிய பெயர் பெற்றுப் புதுப் பரிணாமத்தை அடையச் செய்கிறது.

‘பறை பெறுதல்’ என்பது பாவை நோன்பைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குத் தேவையான பொருட்களை உள்ளடக்கிய தோல்பையைப் பெற்று நோன்பை தொடங்குவதைக் குறிக்கும். இது இறைவனைத் தலைவனாகவும், தன்னை அடியாராகவும் கருதி இறைவனுக்குப் பணி செய்வதற்கும் திருவருள் துணை வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆண்டாளின் வழி சைவப்பத்தி இலக்கியமான திருவெம்பாவையைத் தந்த மாணிக்கவாசகரும் ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து ‘ என்று பாடிப்பரவுவதைத் திருவாசகத்தில் காணலாம்.

‘பத்தி’ வாழ்வதற்கான பெருந்துணை என்னும்  காரைக்கால் அம்மையாரின் திருமுறை மரபு  ஆண்டாள் வழியாக மீளவும் திவ்வியப் பிரபந்த மரபாகவும், வைணவப் பெண்களின் வாழ்க்கை நெறியாகவும் தொடக்கம் பெற்றது. திருப்பாவை கடவுளைக் கண்ணன் உருவில் பெண்ணுரிமைக்கான காவலனாகக் கட்டமைத்து அன்று மட்டுமல்ல இன்றும் பெண்களின் வீரவாழ்வுக்குக் காவலனாக எம்முன் நிறுத்துகிறாள் என்பதையே நான் இங்கு உங்களுக்கு அழுத்தமாகக் கூற விரும்புகின்றேன்.

திருப்பாவையின் 30 பாடல்களும் பெண்களுக்கு அவர்கள் கடவுளைத் தோன்றாத்துணையாகக் கொண்டு அமைதி வாழ்வு வாழ வழிகாட்டுகிறது. இதனால்தான் இன்றும் இந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் எழுச்சிகளும் தரம் பாதுகாப்புகளுக்கு அப்பால் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணும் திருப்பாவையை மார்கழி மாதத்து முப்பது நாள்களிலும் படித்து மகிழ்ந்து தங்களுக்கான முழுஅளவிலான பாதுகாப்பாகக் கடவுள் தம்மோடு உள்ளார் என்ற உணர்வுடன் அச்சமின்றி சந்தேகமின்றி எண்ணிய நல்லனவற்றை எண்ணியவாங்கு முடிக்கும் உள்ள உறுதி கொண்டு வாழ வேண்டும் என்பதே இன்று திருப்பாவை நோன்புக்கான தேவையாக உள்ளது.

மாணிக்கவாசக சுவாமிகளின் திருக்கோவையாரையும் உள்ளடக்கிய திருவாசகத்தமிழும் ஆண்டாளின் வழியில் சைவப்பெண்களுக்கான காவலனாகச் சிவத்தை முன்னிறுத்தி சிவமாதலுக்கான ஆற்றல் தரு சக்தியை வியந்து பாடிப் பெண்கள் சத்தி வழியாகச் சிவத்தைச் சிந்தையிலிருத்திச் செய்வது அத்தனையும் தவமாக்கும் அத்தன் அருளால் சத்சித்தானந்தப் பெருவாழ்வு வாழ அழைக்கிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்
சோதியை யாம் பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவிதான் நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதுஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கண்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எம்தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்!
எனத் தொடங்கும் திருவெம்பாவையின் 20 அருள்பொழிவுகளும் பெண்மையின் உறுதியையும் பெருமைகளையும் மீள்உற்பத்தி செய்கிறது.
‘ஏதேனும் ஆகா நிலை’  பெண்ணின் சமுகநிலை எனவும் அதனை மாற்றிடும் முயற்சிக்குத் தோன்றாத்துணையான கடவுள் உள்ளான் எனவும், அவன் தந்தருள வந்தருளும் தெய்வமாக இல்லந்தோறும் எழுந்தளும் அற்புதத்தை உணருங்கள் எனவும் திருவெம்பாவை பாடி அச்சத்தை சந்தேகத்தை நீக்கி, ஆனந்தப் பெருங்கடலுள் உயிர்களை அழுத்துகின்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

திருவெம்பாவையின் நிறைவுப்பாடலான

போற்றி அருளுக நின்ஆதிஆம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தம்ஆம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம்ஆம் பொன்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆம் இணைஅடிகள்
போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீர்ஆடு ஏல்ஓர் எம்பாவாய்
உயிர் பெற்றிட்ட சச்சித்தானந்தப் பெருநிலையின் மொழிவழி வெளிப்படுத்தலாகவே அமைகிறது.

திருப்பாவையும் திருவெம்பாவையும் மார்கழி நீராடலைப் பெண்ணுரிமைச் செயற்பாடுகளுக்கான மகிழ்ச்சித் தளமாக்குகின்றன.  சமுக உறவாடல் வழி பெண் தான் தனித்தவள் அல்ல என புதுத்தென்பு பெற வைக்கின்றன. ஆனால் ஆணாதிக்க வளர்ச்சியில் இன்று திருவெம்பாவை ஆண்கள் தாங்கள் வீதிவழி சங்கூதி பாடி பெண்களின் தனித்துவ வழிபாட்டு முறைமைக்கும் சங்கூதி நிற்கிறது.  இதனை தமிழ் இளம்பெண்களுக்கு எடுத்துரைத்து பெண்ணுரிமை நிலைக்க பாவை நோன்புகளைப் பெண்களே பெண்களுடன் முன்னெடுத்துத் தங்களுடைய இழக்கப்பட்ட பெண்ணுரிமைகளை மீளவும் நிலைப்படுத்தும் வழிபாடாக மாற்றிச் சமுகநீதியும் மனித சமத்துவமும் உறுதிப்படுத்தப்படும் விடுதலைப் பெருவாழ்வு வாழ உழைத்திடல் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

– முனைவர் றீற்றாபற்றிமாகரன்-