சாலமன் பாப்பையா தமது 90ஆவது வயதில் காலமானார்

தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா தமது 90 ஆவது வயதில் இன்று (11) காலமானார்.

உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.

தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13 ஆயிரம் பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

தொலைக்காட்சி மட்டுமின்றி திரைப்பட துறையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழுக்கென தனக்கான இடத்தை கொண்டுவந்தார்.

அத்துடன் அவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த காலங்களிலும், அதற்குப் பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம், கல்வி இழப்புகள் குறித்துப் பட்டிமன்ற மேடைகளில் மறைமுகமாகவும், சுருக்கமாகவும் தனது வருத்தங்களைப் பதிவு செய்துள்ளார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்