இலங்கையில் சிங்கள மக்களே இனவாதிகள்-வடவல சித்தார்த்த தேரர், பகிரங்கமாக கருத்து

599 Views

சிங்கள மக்களே இனவாதிகள்

இலங்கையில் சிங்கள மக்களே இனவாதிகள் என வடவல சித்தார்த்த தேரர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான அரசியலமைப்பு என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வடவல சித்தார்த்த தேரர், கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தி  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இந்த கருத்துக்களை வெளியிட்டமையால் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும், எனினும் அது தொடர்பில் தான் கவலையடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீண்ட காலமாக என் மனதில் இருக்கும் பெரும் வேதனையான ஒரு விடயத்தை நான் இந்த இடத்தில் சொல்ல ஆசைப்படுகின்றேன். நான் சிலாபம் பகுதியில் கடற்கரைக்கு அருகில் பிறந்தேன்.

நான் வாழ்ந்த அந்த பகுதியில் நிறைய தமிழ் குடும்பங்கள் அன்று வாழ்ந்து வந்தன. 1956 ஆம் ஆண்டு காலப் பகுதி அது. அந்த நாட்களில் நான் பாடசாலைக்கு சென்று வந்ததன் பின்னர் விகாரைக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை வாசிக்கச் செல்லுவேன்.

அன்று அதில் நான் பார்த்த விடயம் தான் இன்று வரை என்மனதில் பெரும் கவலையாக உள்ளது. சிங்களவர் தமிழர் இனக் கலவரம் இடம்பெற்ற வேளையில் சிங்களவர்களால் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் சிங்களவர்களின் உடல்களை அமிழ்த்துகிறார்கள்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தையும் பார்த்தேன் அதேபோல் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் தமிழர்களின் உடல்களை அமிழ்த்தி கொல்கின்றார்கள். அன்று எனக்கு 10 வயது . இதை பார்த்த நாள் முதல் இன்று வரை சிங்கள தமிழ் கலவரம் பற்றி பேச்சை எடுத்தால் என் மனம் என்னிடம் சொல்லும் ”சித்தார்த்த நீ மாத்திரம் சிங்களவர்களுக்காக பேசக்கூடாது” என்று.

அதே போல் நேற்று மாலை ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த புத்தகத்தில் கடந்த 70 களில் நடத்த யுத்தம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யுத்தத்தின் போது இருந்த தமிழ் குடும்பங்கள் வீடுகளை விட்டு காடுகளுக்குள் ஒளிந்திருந்து ஒரு வாரம் கழித்து வீடு உள்ளதா என பார்க்க வருவார்கள்.

வந்து பார்க்கும் போது வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொண்டு வீடு சுக்குநூறாகியிருக்கும். தாய் தன் தந்தையை தேடி அழுகிறாள். காரணம் தந்தையை காணவில்லை. பார்த்தால் தந்தை கிணற்றில் விழுந்துள்ளார் அல்லது இராணுவத்தினால் கொன்று வீசப்பட்டுள்ளார்.

இப்படியான நாட்டில் தான் நாம் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றோம். இன்று தேரர்களாகிய நாம் மக்களிடத்தில் நிறைய, பிரபலமாக, கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகின்றோம். நாம் தான் இனவாதிகள் என நான் சொல்கின்றேன் அது உண்மை தான்.

இதை கூறியதற்காக என்னை விமர்சிப்பார்கள். பத்திரிகைகளில் எழுதினாலும் பரவாயில்லை அதுதான் உண்மை. தேரர்களாக எமக்கு, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய உயிரை உயிராக மதித்து அவர்களுக்கு உதவ முடியும் என்றார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad இலங்கையில் சிங்கள மக்களே இனவாதிகள்-வடவல சித்தார்த்த தேரர், பகிரங்கமாக கருத்து

Leave a Reply