பௌத்த மதத்தை மதிக்கிறோம் ஆனால் பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குமுழமுனை பிரதேசத்தில் இருக்கக்கூடிய குருந்தூர் மலை பகுதியிலே சட்டத்துக்கு முரணாக தொல்பொருள் அகழ்வு செய்யப் போவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட பணிகளை தொடர்ந்து சட்டவிரோதமான முறையிலே விகாரை ஒன்றை அமைக்கின்ற வேலைகளிலே தொல்லியல் திணைக்களமும், பௌத்த மத பீடங்களும் இணைந்து ஈடுபட்டிருந்தார்கள்.
பூஜை வழிபாடுகளுடன் அந்த கோபுரத்திற்குரிய கட்டுமானங்களை ஆரம்பிக்கின்ற நிலையிலே மக்கள் இணைந்து இந்த செயற்பாடு சட்ட விரோதமான செயற்பாடு. குருந்தூர் மலையானது பல ஆயிரம் வருடங்கள் தமிழர்களுடைய பழமையான வரலாற்றோடு அரசாட்சி புரிந்த இடம்.
இங்கே சைவ, தமிழ் அடையாளங்கள் ஏற்கனவே புதைந்து கிடந்தது .
அண்மைக் காலம் வரையில் சிவன் வழிபாடுகள் இடம் பெற்றிருக்கின்றது. இராணுவத்தினருடைய அல்லது வேறு தரப்புகளுடைய துணையோடு அவை அனைத்துமே அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றது.
இங்கு அகழ்வு ஆய்வை ஆரம்பிப்பதற்காக அப்போதைய தொல்லியல் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வந்த போது அதற்கு எதிராக போராட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அவர் மக்களுக்கு ஒரு விடயத்தை தெரியப்படுத்தியிருந்தார். தாங்கள் இதில் அகழ்வாராய்ச்சி மட்டும்தான் செய்ய போகின்றோம். எந்த விதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள போவதில்லை என.
இதனால் மக்கள் அமைதியாக இருந்த போது அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அகழ்வு பணிகளை ஆரம்பித்துவிட்டு அந்த அகழ்வு பணிகள் நடைபெறுகின்ற இடங்களுக்குள் பொதுமக்கள் செல்லக்கூடாது என்ற சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இரகசியமான முறையிலே பௌத்த தாது கோபுரம் கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அந்த கட்டிடம் இன்று உயர்ந்து நிற்கின்றது.
தொல்லியல் திணைக்களத்தினர் உடந்தையாக இருந்து பொய்யான முறையிலே வரைபடங்களை தயார்படுத்தி இதனை கட்டுவதற்கு ஒத்துழைத்திருக்கின்றார்கள். ஆனால் ஏற்கனவே நீதிமன்றத்திலே தமிழ் தரப்பினால் வழக்குகள் போடப்பட்டு 2018 ஆம் ஆண்டிலிருந்து வழக்குகள் நடைபெற்று வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பின்படி இங்கே எந்த ஒரு தரப்பும் கட்டுமானங்களில் ஈடுபடக்கூடாது என சொல்லப்பட்டிருந்த போதும் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தாமல் சட்டத்துக்கு முரணான முறையிலே சிங்கள தரப்பை பாதுகாக்கின்ற விதமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனாலே மக்கள் திரண்டு நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொலிஸார் இந்த போராட்டத்திலே ஈடுபட்டிருந்த தவபாலன், சத்தியசீலன், கிந்துயன் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்து கடுமையாகத் தாக்கி கீழே போட்டு மிதித்து நெஞ்சிலே காலால் உதைத்து இலத்தியால் அவர்களுக்கு அடித்து மிக மோசமாக தாக்கியிருக்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்ணீரை எடுத்து வருவதற்கு கூட அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த பகுதிகளிலும் சரி, இந்த மலையடிவாரத்திலும் சரி, நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் கொட்டகைகள் அமைத்து அவர்களுக்கு உணவுகள் எடுத்து வரப்பட்டு அவர்கள் ஆறுதலாக இருந்து அந்த உணவுகளை உண்டு கழித்து தங்களுடைய செயற்பாடுகளை செய்வதற்கு காவல் இருக்கின்ற காவல்துறையினர் எங்களுக்கு பச்சைத் தண்ணீர் கூட கொண்டு வர முடியாதவாறு தடுத்தது உணவு கொண்டு வந்தவர்களிடம் உணவெல்லாம் பறித்து எறிந்து மோசமான செயற்பாட்டை செய்திருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்துவதாக தொல்லியல் பணிப்பாளர் இந்த இடத்துக்கு வந்து உறுதிமொழி தந்திருக்கின்றார். அவருக்கு நாங்கள் கூறியிருக்கின்றோம்.
1932 ஆம் ஆண்டிலே தொல்பொருள் திணைக்களத்தினுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இது குருந்தூர் மலைக்கு சொந்தமான இடம் என்றுதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர வேறு எந்த ஒரு விடயங்களும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் நீங்கள் இதிலே பௌத்த அடையாளங்கள் பௌத்த கோவில் இருந்ததென கூறி ஒரு வரைபடத்தை கொண்டு வந்து மேற்கொள்ளுகின்ற இந்த முயற்சிகள் திட்டமிட்ட ரீதியிலே அரசாங்கத்தையும், அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு திட்டமிட்டு பௌத்த மயமாக்குகின்ற ஒரு செயற்பாடு இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தோம் .
நாங்கள் ஒருபோதும் நியாயமற்ற முறையிலே போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. நாங்கள் சிங்கள மக்களுக்கு , பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல, சிங்கள மக்களை , பௌத்த மதத்தை மதிக்கிறோம். ஆனால் பௌத்தத்தின், சிங்களத்தின் பெயராலும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.