பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில்  பொருளாதார நெருக்கடி  ஏற்பட்டதால்  இம்ரான்  கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது.

இந்த தீர்மானத்தை நாடாளு மன்ற துணை சபாநாயகர் குவாசிம்கான் கடந்த 3-ம் தேதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து இம்ரான்கானின் பரிந்துரையின் பேரில் அதிபர் ஆரிப் ஆல்வி, நாடாளுமன்றத்தை கலைத்தார். ஆனால் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நீண்ட இழுபறிக்கு பின்பு நடந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பை நடத்தினர். தீர்மானம் வெற்றி பெற 172  பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 174 பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து  இம்ரான் கான் அரசு ஆட்சியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப்  நாட்டின் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஷாபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப் 2017 இல் ஊழல் குற்றச்சாட்டுகளால் பிரதமர் பதவியை வகிக்க உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சில மாதங்கள் கழித்து மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதையடுத்து சகோதரர் பிரதமராகும் சூழலில் விரைவில் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamil News