‘உறவுகளுக்கு பணம் அனுப்புங்கள்’ – வெளிநாடுவாழ் இலங்கையர்களுக்கு அரசு வேண்டுகோள்

உறவுகளுக்கு பணம் அனுப்புங்கள்

உறவுகளுக்கு பணம் அனுப்புங்கள்

அத்தியாவசியத் தேவைகளான உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்ள வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்கள் தங்களின் வீடுகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசு தனக்கிருக்கும், 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனை திருப்பிச் செலுத்த முடியாது என நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) அறிவித்திருந்தது. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள் சொந்தநாட்டிற்கு பணம் அனுப்பி உதவ வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று புதன்கிழமை மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர வெளிநாட்டில் வாழும் இலங்கை மக்களின் உதவி தேவைப்படுகிறது. இலங்கைக்கு தேவையான அந்நியச் செலாவணியை அவர்கள் நன்கொடையாக வழங்க வேண்டும். நன்கொடை வழங்குவதற்கு வசதியாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பும் பணம் தேவைப்படும் இடங்களில் மட்டுமே செலவழிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அந்நியச்செலாவணி பணம், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி உறுதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.