மட்டு- சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

179 Views

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவுகளுடன் (1990.09.09 – 2021.09.09) மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வடக்குத்திசையாக அமைந்துள்ள கிராமமே சத்துருக்கொண்டான்.

IMG 4564 மட்டு- சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

1990 இன் ஆரம்பத்தில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் இக்கிராமத்து மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்தனர். முற்றுமுழுதாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இக்கிராமத்தில் பாரிய இராணுவமுகாமானது  சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.  பின்னர் மக்களை மீள் குடியேறுமாறு இராணுவத்தினர் அழைத்தார்கள் அதனை நம்பி குடியேறச் சென்ற அனைத்து  மக்களையும் 1990.09.09 அன்று இராணுவமும், இசுலாமிய யிகாத் மற்றும் ஊர்காவற்கவற்படையினரும் இணைந்து கைது செய்து படுகொலை செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 85 பெண்கள் உள்ளடங்குவர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினராலும், யிகாத்துக்களாலும் கற்பழிக்கப்பட்டு அவர்களின் மார்பகங்கள், கை, கால்கள் என்பவை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 குழந்தைகள் உட்பட 68 சிறுவர்களும் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர்.கிட்டத்தட்ட 17 ஆண்கள், உறுப்புக்கள் வெட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டனர்.மொத்தமாக 205 பேர் சத்துருக்கொண்டான் படுகொலையில் கொல்லப்பட்டனர்.

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு

சிறீலங்கா இராணுவத்தின் மற்றுமொரு இனவழிப்பு அரங்கேற்றப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

மேலும் இவ்வாறு  படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள்  சிலர் கலந்துகொண்டு இந்த நிகழ்வினை நடாத்தினார்கள்.இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை உறுப்பினர்களான கௌரி,து.மதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply