எந்த நீதியும் இல்லாத இனப்படுகொலை வரிசையில் மட்டு-சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாள் இன்று

180 Views

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாள் இன்று

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாள் இன்று31 வருடம் கடந்தும் எந்த ஒரு நீதியும் இதுவரை இல்லாத நிலையில், சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாள் இன்று நினைவு கூரப்படுகின்றது. சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நினைவையும் அந்த இடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செய்யமுடியாத நிலையில்  உள்ளோம் என, தமிழரசு கட்சி ஊடக செயலாளரும்,பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 31 ஆம் ஆண்டு நினைவு, (09/09/2021) தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவற்றில் 5 விசேட தேவையுள்ள பிள்ளைகள். மேலும் 42 பிள்ளைகள் 10 வயதிற்குட்பட்ட பிள்ளைகள். 85 பேர் பெண்கள், 28 பேர் முதியவர்கள் என பலதரப்பட்டவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் இடம்பெறும் முதல் நாள் அன்று இராணுவ முகாம்களிலிருந்து இராணுவ உளவாளிகள் நோட்டமிட்ட நிலையில் நன்கு திட்டமிட்டு அடுத்த நாள் அதாவது 09.09.1990 ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில், இராணுவ சீருடையணிந்தவர்களும் சத்துருக்கொண்டான் முகாமுக்கு வருவார்கள் அங்கே உங்களுக்கு கூட்டம் ஒன்று இருக்கின்றது என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈழவிடுதலை வரலாறுகளை இப்போது இருக்கும் நாம் அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துக்கூறாமல் விடுவோமானால் அல்லது இவ் தினங்களை அனுஷ்டிக்காமல் விடுவோமானால் எமது வரலாறு மறைப்பதற்கு தூண்டுகோலாய் அமையும்

நடக்க முடியாதவர்களை இராணுவ லொறிகளில் ஏற்றிச்சென்று ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என வேறு வேறாக பிரிக்கப்பட்டனர். சிங்கள இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையும் இணைந்தே இந்த கோர தாண்டவத்தை அரங்கேற்றியது.

இவற்றுக்கெல்லாம் தயாரான நிலையில் அன்று மாலை 7.00 மணியளவில் இவர்கள் வாளினால் வெட்டியும், கத்தியினால் குத்தியும் துப்பாக்கிகளினால் சுடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்டனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்கள் குழிகளில் தூக்கி வீசப்பட்டனர். அன்று மாலை 8.00 மணியளவில் பெரும் கூக்குரல் சத்தமும் சிறுவர்களின் மரண ஓலமும் எங்கும் எதிரொலிச்ச வண்ணம் காணப்பட்டது.

சத்துருக்கொண்டான் படுகொலை சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 187 தமிழ் மக்களை இலங்கை அரச படைகளாலும் அவர்களால் பயன்படுத்திய தமிழ் ஆயுத குழுவாலும் ஊர்காவல் படையாலும் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது தொடர்பாக இலங்கை அரசு இரு விசாரணைக் குழுக்களை அமைத்தும், எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதி அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் “மண்ணா” கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்டனர்.

இப்போது 31 வருடங்கள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த 30 வருடங்களில் ஐந்து தடவை ஆட்சிகள் மாறிமாறி சிங்களத்தலைவர்கள் அலங்கரிக்கின்றனர். எந்த ஜனாதிபதியோ பிரதமரோ அரசாங்கமோ தமிழ் இனப்படுகொலைக்கான எந்த நீதியையும் பெற்றுத்தரவில்லை.

சர்வதேச நாடுகளும் இது தொடர்பாக எமக்கு நீநி நியாயங்களையோ அரசியல் தீர்வையோ பெற்றுத்தரவில்லை. ஏற்கனவே இருந்த அரசியல் யாப்புகளை மாற்றுவதற்கும் மாடுகளை வெட்டுவதற்கு தடைசெய்வதற்கும் காட்டும் அக்கறையை தமிழினப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற மனநிலை எந்த அரசாங்கங்களுக்கும் இருந்ததில்லை.

ஆனால் தமிழர்களாகிய நாம் எமக்கு ஏற்பட்ட இன்னல்கள், படுகொலைகள், அவலங்கள் என்பவற்றை மறக்காமல் அந்தந்த தினங்களில் எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைவு கூரவேண்டியது எமது தார்மீக கடமையாகும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே எமது இளைய சந்ததியினர் , இளைஞர்கள், மாணவர்கள் எமது வரலாற்றை அறிய ஏதுவாக இருக்கும்.

ஈழவிடுதலை வரலாறுகளை இப்போது இருக்கும் நாம் அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துக்கூறாமல் விடுவோமானால் அல்லது இவ் தினங்களை அனுஷ்டிக்காமல் விடுவோமானால் எமது வரலாறு மறைப்பதற்கு தூண்டுகோலாய் அமையும்”  என்றார்.

Leave a Reply