ஐ.நா.கடிதத்தில் 13 ஐ வலியுறுத்தாது தவறிழைத்திருக்கின்றார் சம்பந்தன்- கலாநிதி தயான் ஜயதிலக ஆதங்கம்

தவறிழைத்திருக்கின்றார் சம்பந்தன்
தவறிழைத்திருக்கின்றார் சம்பந்தன்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந் தவறிழைத்துவிட்டார் என்று கலாநிதி தயான் ஜயத்திலக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண்நகையாக உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவ்விதமான விடயத்தை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தாயன் ஜயத்திலக்க மேலும் தெரிவிக்கையில்-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதமொன்றை அனுப்புவதை நான் தவறு என்று கூறவில்லை. அந்தச் செயற்பாட்டை தமிழ் மக்களின் தலைவராக அவர் செய்வது மிகவும் பொருத்தமானதொரு விடயமாகும்.

ஆனால், அவர் யதார்த்தமானதொரு விடயத்தை தவிர்த்து விட்டிருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அப்போதும் தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2012, 2013, 2014, 2015 (இலங்கை இணைஅனுசரனை வழங்கியது), 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போதும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆறு தீர்மானங்களில் காணப்படுகின்றது. அந்த ஆறு தீர்மானங்களில் ஒன்று மட்டும் இலங்கைக்கு ஆதரவானது. ஏனையவை எதிரானவை. ஆனால் தொடர்ச்சியாக தீர்மானங்கள் ஆதரவாக வந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி 13ஆவது திருத்தச்சட்ட விடயம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

அவ்விதமானதொரு விடயத்தை கவனத்தில் கொள்ளாது விடுவது பொருத்தமற்றது. அதேநேரம், சம்பந்தன் இம்முறை அனுப்பிய கடிதத்திலாவது 13ஆவது திருத்த விடயத்தைக் கவனமாக கையாண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அவர் உள்ளிட்ட ஏழு தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்கள்.

அவ்விதமாக கடிதம் அனுப்பிய பின்னரும் ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதத்தில் 13ஐ குறிப்பிடாது விடுவது பொருத்தமற்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்தியாவின் முயற்சியால்தான் 13ஆவது திருத்தச்சட்டம் உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதை சம்பந்தன் அறியாதவர் அல்லர். ஆகவே அந்த விடயத்தை அவர் குறிப்பிடாது விடுகின்றமையானது பாரதூரமான விடயமாகும்.

இதனைவிடவும், தற்போது இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கப்போகின்றது. இது இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் சார்ந்த விடயம்.

ஆனால், இந்தியாவுக்கான தூதுவர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் இந்திய அரசாங்கம் கோரும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை வழங்குவதன் ஊடாக 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று கணக்குப் போட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகளை நீக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பில் 13 ஒழிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன ? ஐ.நா.தீர்மானத்தில் 13 குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை தமிழ்த் தரப்புக்களே கோராதபோது இலங்கை அரசாங்கம் அதுபற்றி கரிசனை கொள்ளும் என்று கூறவும் முடியாது.

ஆகவே 13 ஆவது திருத்தச்சட்ட விடயத்தினை சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிடாது பெருந்தவறு இழைத்துவிட்டார். இது சந்தர்ப்பங்களை வலுவிழக்கச் செய்துள்ளது-என்றார்.

Tamil News