மேலும் மூன்று கடிதங்களை ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ள நிலையில் மேலும் மூன்று கடிதங்களை ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை தமிழ் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களிடத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர், வரும் பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இலங்கையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன் அது சார்ந்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த தடவை விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீகாந்தா உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்த கடிதத்தின் தொடர்ச்சியாக அண்மைக்கால விடயங்களை மையப்படுத்திய கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனைவிட, வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவில் சமூகங்களின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகளுக்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக மெய்நிகரில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு அடுத்தபடியாக, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்களின் சார்பில் பிறிதொரு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனைவிட, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் கடந்த வருடத்தைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களான, சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், யோகேஸ்வரன், சரவணபவன், சிறிநேசன் போன்றவர்கள் பக்கத்திலிருந்தும் கடிதங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், சிவில் தரப்பிடமிருந்தும் பிறிதொருகடிதம் ஜெனிவாவுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அப்பணியில் ஈடுபடப்போகும் அமைப்புக்கள் மற்றும் பெயர் விவரங்கள் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை.

Tamil News