ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து சஜித் அணி எச்சரிக்கை

Iranian official Ebrahim Raisi 2021 ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து சஜித் அணி எச்சரிக்கைஉலகளாவிய மோதலுக்குள் இலங்கையை தள்ளிவிடும் வகையில் அரசாங்கம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ஹர்ஷன ராஜகருண மேலும் கூறியுள்ளதாவது,

“இவ்வாறான செயற்பாடு மூலம் இந்த நாட்டுக்கு ஏற்கனவே பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மேலும் தீவிரமடையும் வகையிலேயே அமைந்துவிடும். விரும்பியோ, விரும்பாமலோ சர்வதேச அரசியலில் நாடு தொடர்புபட வேண்டும். ஆனால் பிரச்சினைகளை இழுத்துப்போட்டுக் கொண்டு அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது. உலகளாவிய அரசியல் கொடுக்கல் வாங்கல்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் இலங்கை உலகளாவிய மோதலுக்கு தள்ளப்பட்டால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது.

மேலும் நமது நாட்டின் ஆட்சியாளர்கள் சர்வதேச நாடுகளுடன் சிறப்பான இராஜதந்திர தொடர்புகளை பேணவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம். உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும்.மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்றார்.

ஈரானினால் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். உமா ஓயா பல்நோக்கு திட்டம் ஈரானிய நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திட்டமாக கட்டப்பட்டது. இதன் மூலம், 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஐந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உற்றுநோக்கியுள்ளன. இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவுள்ள அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து திருப்தியில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் அறியமுடிகிறது.