இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் – வெளியேறும் பயணிகள்

319 Views

ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் காரணமாக, இலங்கைக்கு வருகைத் தந்த ரஷ்யாவிற்கு சொந்தமான பயணிகள் விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் திகதி தடையுத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் 16ம்திகதி வரை அமலில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும், நீதிமன்றத்தின் தடையுத்தரவை இரத்து செய்ய கோரி, ரஷ்ய விமான நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகயை வரும் 8ம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட மனுவொன்றை சட்ட மாஅதிபர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

அதே நேரம் ரஷ்யாவிற்கு சொந்தமான விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை அடுத்து, ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தருவோருக்கு விநியோகிக்கப்படும் விமான பயணச் சீட்டுக்களை விநியோகிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருந்த சுற்றுலா பயணிகளை ரஷ்யா மீள அழைத்துள்ளதாக ரஷ்யா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

 ”இலங்கைக்கு நாங்கள் 14 நாட்கள் சுற்றுலா பயணிகளாக வருகைத் தந்தோம். ஹிக்கடுவை பகுதியில் இருந்தோம். அவசரமாக ஏற்பட்ட நிலைமை காரணமாக, இலங்கைக்கான சுற்றுலா பயணத்தை கைவிட்டு, உடனடியாக நாட்டிற்கு வருகைத் தருமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. 14 நாட்களுக்கு வருகைத் தந்த நாங்கள், 7 நாட்களில் சுற்றுலா பயணத்தை கைவிட்டு செல்கின்றோம். ஏரோபுளோட் விமானம் இறுதி விமானத்திற்காக நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்தோம்” என ரஷ்ய பிரஜையான எலேனா மெசேன்கோவா தெரிவித்துள்ளார்.

”இந்த சுற்றுலா பயணத்தின் போது டீசல் இருக்கவில்லை. மின்சார வெட்டு அமலில் இருந்தது. இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் மத்தியில் மிகவும் விருப்பத்துடனேயே நாங்கள் இலங்கைக்கு வருகைத் தந்தோம். எமது ரஷ்ய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு டாலர் கிடைத்தது. இந்த தீர்ப்பினால் இலங்கைக்கு அந்த நிலைமை இல்லாது போயுள்ளது.” என அவர் கூறுகின்றார்.

கடந்த இரு தினங்களில் மாத்திரம் இலங்கையிலிருந்து சுமார் 500ற்கும் அதிகமான ரஷ்யா பிரஜைகள் வெளியேறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலங்கைக்கு 348,314 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அதில் 41,591 சுற்றுலா பயணிக்ள ரஷ்ய பிரஜைகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

நன்றி பிபிசி தமிழ்

Tamil News

Leave a Reply