எம் மக்களை ரஷ்யா திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது- உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது

ரஷ்யா திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது

தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய்  மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின்  திட்டமிட்ட படுகொலை என்றும்  உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது சிறப்பு இராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த 39 நாட்களாக  உக்ரைன்   மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன்    இராணுவமும் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் இராணுவத்தினர்  மற்றும் பொதுமக்கள் சென்றிருந்த போது  அங்குள்ள தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் கிடந்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள  புச்சா மேயர் அனடோலி பெடோருக், “புச்சா பகுதியில் 300 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளனர். நகர தெருக்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. குவியல் குவியலாய் சடலங்கள் கிடந்தன. இதனால் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி உடல்களை புதைத்தோம்” என்றார்.  மேலும் இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் கூறும்போது, “இது ரஷ்ய இராணுவத்தின் திட்டமிட்ட படுகொலையாகும். கீவ் அருகேயுள்ள புச்சா நகரில் ஒரே இடத்தில் 300 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபருக்கான ஆலோசகர் மைக்கேலோ போடோலியாக் கூறும்போது, “கீவ் நகரம் 21-ம் நூற்றாண்டின் நரகமாக மாறி உள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும், பெண்களும் கொல்லப்பட்டு சாலைகளில் வீசப்பட்டுள்ளனர். நாஜிக்களின் கொடூரக் குற்றங்கள் தற்போது ஐரோப்பிய யூனியனுக்கு திரும்பியுள்ளன” என்றார்.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ்கூறும்போது, “உக்ரைனின் இர்பின்,புச்சா நகரங்கள் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது. பொதுமக்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களை போர்க்குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும்” என்றார்.

Tamil News