மலேசியா வந்துவிட்டதாக தாய்லாந்து நாட்டின் தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்: சிறைப்படுத்தியுள்ள தாய்லாந்து

தீவில் விட்டுச் செல்லப்பட்ட ரோஹிங்கியா அகதிகள்

மலேசியா எல்லைக்கு அருகே உள்ள தாய்லாந்து நாட்டின் Dong தீவில் குழந்தைகள் உள்பட 59 ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் விட்டுச்சென்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 31 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“மலேசியாவுக்கு வந்து விட்டதாக சொல்லி இவர்கள் இத்தீவில் சில நாட்களுக்கு முன்பு படகிலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர்,” என தாய்லாந்து காவல்துறையின் துணைத் தலைமை அதிகாரி Surachate Hakparn தெரிவித்திருக்கிறார்.

இந்த அகதிகளுக்கு தாய்லாந்து மனிதாபிமான உதவியினை செய்திருப்பதாக கூறியுள்ள அதிகாரி Surachate, மேலதிக விசாரணைக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது மீட்கப்பட்ட ரோஹிங்கியா தஞ்சக் கோரிக்கையாளர்களின் அகதி அந்தஸ்தை தீர்மானிப்பதற்கான நடைமுறைகளை அணுகுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் உதவியினை தாய்லாந்து அரசு செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

“மீட்கப்பட்ட ரோஹிங்கியாக்களை சிறையில் பூட்டி சாவியை தூக்கி எறியும் கொள்கையை தாய்லாந்து அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாய்லாந்துக்கு தற்போது வந்துள்ள ரோஹிங்கியாக்களை சந்திக்க ஐ.நா. அகதிகள் ஆணையத்தை அனுமதிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் (பொறுப்பு) எலைனி பியர்சன்.

Tamil News