அரசுடன் கூட்டமைப்பு நிபந்தனையுடன் பேசவேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்

423 Views

selvam adaikalanathan 800 அரசுடன் கூட்டமைப்பு நிபந்தனையுடன் பேசவேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சு இடம்பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக அது அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசாங்கத்துக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெற உள்ளதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சு மேற்கொள்வதற்கு பின்னிற்கப் போவதில்லை. ஆனால், கடந்த கால அனுபவத்தை வைத்துக் கொண்டு, அரசாங்கம் எங்களுடன் பேசுவதற்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக சில விடயங்களை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பது நன்றாகஅமையும்.

அந்த வகையில் இன்று ஐ.நா.தீர்மானங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் நடை பெறுகின்ற நில அபகரிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலை காணப்படும் நிலையில், காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்களத்தினூடாகவும் எமது நிலங்கள் பறிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கும் அரசாங்கம் முதன் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைக்கின்ற போது நல்லெண்ண முயற்சியாக சில விடயங்களை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மாகாணசபை முறைமையை இருக்கிற அதிகாரங்களுடன் செயற்படுவதற்கான ஆணையை அரசாங்கம் பிறப்பிக்க வேண்டும். அரசியல் கைதிகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. அபகரித்த நிலங்களை விட்டுக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கின்ற போது நாங்கள் பேச தயாராக இருக்கிறோம். இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா.சபையிலே காலக்கெடு எடுத்து கொடுத்துள்ளதாக எம்மைப் பலர் கூறுகிறார்கள். பேச்சு என்று வருகின்ற போது இந்திய அரசுடன் இணைந்த ஒரு செயல்பாட்டை செய்வதன் ஊடாகத்தான் வெளிப்படைத் தன்மை உருவாகும்.

அரசாங்கம் எங்களுடன் பேசுகின்ற ஒரு முயற்சியை முன்னெடுக்குமாக இருந்தால் நாங்கள் எதிர் கொள்கின்ற பிரச்னைகளுக்கு நல்ல சமிக்ஞைகிடைப்பதன் ஊடாகத் தான் பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்த முடியும்” என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply