பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் கூட்டமைப்பு

424 Views

தடுப்பில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்
“தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். அதேவேளையில், இந்தச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்” என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) மற்றும் எம்.பிக்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வை வழங்கக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் என்பன தொடர்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விளக்கிக் கூறினார்கள். இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்ததாவது;

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என இலங்கை அரசாங்கம் வாக்குறுதி ஒன்றை 2017 ஆம் ஆண்டு கொடுத்ததன் அடிப்படையில்தான் ஜ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டது. அவ்வாறு வாக்குறுதி கொடுத்திருந்தும் நான்கு வருடங்களாக அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதனையும் செய்யாத காரணத்தினால்தான் இப்போது அதனை மீண்டும் நீக்குவது என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. அடுத்த வருடத்திலிருந்து இது நீக்கப்படும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மிகவும் மேசமானது என்பதை நாங்கள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்திருக்கின்றோம். இப்போது திரும்பவும் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றார்கள். இந்த சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இதில் பிரதானமாக, இந்தச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்கள். தற்போது விஷேடமாக கிழக்கு மாகாணத்திலும் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் குறித்தும் நாம் தெரிவித்தோம். இராணுவமயமாக்கல் குறித்தும் அவர்களுக்கு விளக்கினோம். இவை அனைத்துக்கும் காரணம் நாட்டில் அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு இல்லை. அவ்வாறான அரசியலமைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினோம்” எனத் தெரிவித்தார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply