நீண்டகால தடுப்பின் பின் நிரபராதிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யலாம் என சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள், இழப்பீட்டைக் கோரியும் சட்டத்தின்முன் சமமாக நடத்தப்படவில்லை. எதேச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகிய காரணங்களை முன்னிறுத்தியும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதிகாரிகள் வசமுள்ள அதிகாரங்கள் மற்றும் அவை துஷ்பிரயோகம் செய்யப்படும் முறை தொடர்பில் தடுப்புக்காவலில் இருந்த காலத்தில் நன்கறிந்திருக்கக் கூடிய அவர்கள், தாம் அச்சுறுத்தலுக்கும் தொடர் கண்காணிப்பிற்கும் இலக்காகலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் பெரும்பாலும் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் உள்ளடங்கலாக அடுத்தகட்ட சட்டநகர்வுகளை மேற்கொள்ளவதற்கு முன்வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.