சர்வதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒரு அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கையை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்து தமிழர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் பல்வேறு சந்திப்புகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனை சந்தித்த நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல்,நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்தாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தாகவும் மட்டக்களப்பு மாநகரசபையினால் இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர்,
நோர்வே மற்றும் நெதர்லாந்து தூதுவர்களிடம் மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் சம்மந்தமாகவும், அரசியல் ரீதியில் மாநகரசபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் எவ்வாறு தடைப்படுகின்றது என்பது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.
அத்துடன் மாநகரசபையூடாக இரண்டு திட்டங்கள் தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. நெலதர்லாந்து தூதுவரிடம் ஆற்றினை ஆளப்படுத்தவதற்கான இயந்திர விடயமும், நோர்வே சிநேக பாலமொன்று காந்திப்பூங்காவில் இருந்து பொதுச்சந்தைக்குச் செல்லும் வகையிலான பாலமொன்றுக்கான திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசியல் ரீதியில் 13வது திருத்தச்சட்ட அமுலாக்கம், மட்டக்களப்பின் பரம்பல் நிலையை மாற்றியமைப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற குடியேற்றத் திட்டங்களான மாதவணை, மயிலத்தமடு, கெவிலியாமடு தற்போது எதிர்வரும் 21ம் திகதி குடியேற்றத் திட்டமிடப்பட்டிருக்கின்ற காரமுனை போன்ற விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.
சர்வதேச ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒரு அழுத்தத்தினைக் கொடுத்து இலங்கையை பேச்சுவார்த்தை மேசைக்கு எடுத்து தமிழர்களுக்குரிய தீர்வைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.