சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது “ இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?,மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?, அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா? உள்ளடங்களாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் “காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டு போராட்டம் உறவினர்கள், மனித நேய செயற்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் திருகோணமலையில் வலிந்து கடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பினை முன்னெடுத்தார்கள்.
இதன் போது “எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை .பல கடிதங்கள் எழுதியிருப்போம் தீர்வு கோரி .அது பலனில்லை. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு என எதிலும் நம்பிக்கை இல்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த கவன ஈர்ப்பு போராட்டம், மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகே நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைவேண்டியும் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச விசாரணைவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் தமது உறவுகளை மீட்டுத்தரவும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையினை வெளிப்படுத்தவும் சர்வதேச சமுகம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட மனுவின் முழு வடிவத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்.
Memo on the International Human Rights Day 2021