அவுஸ்திரேலியா: பப்பு நியூ கினியா தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகள் கனடாவில் குடியமர்வு 

429 Views

தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகள்

கடந்த எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசால் பப்பு நியூ கினியா தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த அகதிகள் தனிநபர்கள் ஸ்பான்சர் மூலம் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு 7 அகதிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசால் பல ஆண்டுகளாக இன்னல் மிகுந்த வாழ்வை எதிர்கொண்ட அகதிகள், கனடாவில் தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாக அகதிகள் நல ஆர்வலர்கள் உணர்கின்றனர்.

அவுஸ்திரேலிய அரசால் கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்ட சுமார் 100 அகதிகளை கனடாவில் மீள்குடியமர்த்த அவுஸ்திரேலியா  மற்றும் கனடிய சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் இந்த அகதிகள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த அகதிகள் அவுஸ்திரேலியாவில் கடல் வழியாக தஞ்சமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Operation #NotForgotten எனும் பிரச்சார செயலின் மூலம் அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அகதி கவுன்சில், MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புகள் உதவி வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு முதல் பப்பு நியூ கினியா அல்லது நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த 157 அகதிகள் சார்பாக கனடாவில் மீள்குடியமர்த்த விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த கனடா மீள்குடியமர்வு என்பது அவுஸ்திரேலிய – அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தில் விடுபட்ட அகதிகளுக்கு நிரந்தரமான வாழ்க்கையை தரும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாத அவுஸ்திரேலிய அரசின் கணக்குப்படி, 106 அகதிகள் நவுருத்தீவிலும் 122 அகதிகள் பப்பு நியூ கினியா தீவிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply