தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத தொழிலை தடுக்க ரவிகரன் கோரிக்கை

தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத


கொக்கிளாய் கடற்பரப்பில் அதிகரித்துள்ள 
புல்மோட்டை மற்றும்  தென்னிலங்கை மீனவர்களின் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் செயற்பாட்டைத் தடுக்க  உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்  வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்,

“கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும், திருகோணமலை – புல்மோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் செயற்பாட்டில் ஈடுபடுவதாக கொக்கிளாய்ப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

குறிப்பாக தென்னிலங்கை மற்றும், புல்மோட்டையைச் சேர்ந்த மிக அதிகளவான படகுகள் சட்டவிரோத சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடுவதாகவும் கொக்கிளாய் பகுதி தமிழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பாரிய அளவில் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் நடவடிக்கைகள் இடம்பெறுவதால், பாரம்பரிய சிறுதொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற கொக்கிளாய் பகுதி தமிழ் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோத சுருக்குவலைத் தொழிலின் மூலம் அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டு, மிகக் குறைந்தவிலையில் விற்பனைசெய்யப்படுவதால் சிறுதொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மற்றும், கூலித்தொழிலாளர்களின் சந்தைப்படுத்தல் வெகுவாகப் பாதிக்கின்றது.

அதேவேளை இவ்வாறு சட்டவிரோத தொழில் நடவடிக்கை பாரிய அளவில் இடம்பெறுவதால் சிறுதொழிலில் ஈடுபடுபவர்கள், மீன் இன்றி கரைதிரும்பவேண்டிய அவல நிலையும் காணப்படுகின்றது.

அத்தோடு எமது முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய கடல் வளத்தினை அழிக்கின்ற மிக மோசமான செயற்பாடாகவும் இதனைப் பார்க்க முடிகின்றது. இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டியவர்கள் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த அரசாங்கத்திலே, கடற்றொழிலுக்குப் பொறுப்பாக ஒரு தமிழ் அமைச்சரே காணப்படுகின்றார். அவர் இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலே எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.

பலதடவைகள் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இந்த சட்டவிரோத தொழில் நடவடிக்கை குறித்தும், அதனால் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பிலும் கடற்றொழில் அமைச்சரிடம் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

எனினும் கடற்றொழில் அமைச்சர் இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மீனவ மக்கள் மத்தியில் பலத்த அதிர்ப்தியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை இந்தச் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடற்படையினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இவ்வாறு சட்டவிரோத கடற்றொழிலுக்கு படகுகள் திரண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினரின் இந்தச் செயற்பாடு, அவர்கள் இந்த சட்டவிரோத தொழிலில் பங்குதாரர்களாக இருப்பார்களோ என்ற மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப் படுத்த உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றார்

Leave a Reply