வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் | அகிலன்

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றார். 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து – ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவி மூலம் பாராளுமன்றத்துக்கு வந்து, பிரதமர் பதவியைப் பெற்று இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றியிருக்கின்றார்.

பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாகவே, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது அதிரடித் தாக்குதல் ரணிலின் உத்தரவில் நடத்தப்பட்டது. தான் பதவிக்கு வருவதற்கு காரணமாக இருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்  இப்போது ரணிலுக்குத் தொல்லையாகிவிட்டனர். போராட்டக்காரர்களைக் கையாள்வதற்கு ரணில் கையாண்ட நடைமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனங்களைப் பெற்றிருக்கின்றது. இவ்விடயத்தில் ரணில் சற்று நிதானமாகச் செயற்டபட்டிருக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

தொடர்ச்சியான தோல்விகளால் கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருப்பதில் கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்தவர் ரணில். தலைமைப் பதவி காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச தலைமையிலான அணி பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியையும் அமைத்தது. எதிர்க்கட்சியாகவும் இருக்கிறது. சஜித்தின் பிளவுதான் கடந்த பொதுத் தேர்தலில் ரணிலுக்கு கிடைத்த பெரும் தோல்விக்கு பிரதான காரணம்.

கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்காத நிலையில் – தேசியப்பட்டியல் மூலமாக கிடைத்த ஒரேயொரு ஆசனத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றம் வந்த ரணில் இன்று ஜனாதிபதியாகியிருக்கின்றார். அரசியல் என்பது வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதுதான். இனிமேல் ரணிலுக்கு அரசியலில் இடமிருக்கப்போவதில்லை என அனைவருமே நம்பியிருந்த ஒரு நிலையில், சந்தர்ப்பங்களை மதிநுட்பத்துடன் பயன்படுத்தி அரசியலின் உச்ச பதவிக்கு வந்திருக்கின்றார் ரணில்.

ரணிலின் வீழ்ச்சிக்கு சஜித் பிரேமதாச எந்தளவுக்கு காரணமாக இருந்தாரோ அதேபோல அவரது தற்போதைய எழுச்சிக்கும் சஜித்தான் காரணம். மகிந்த ராஜபக்ச மே 9 ஆம் திகதி பிரதமர் பதவியைத் துறந்த போது, அந்தப் பதவியைப் பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சஜித்தைத்தான் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய முதலில் அழைத்தார். ஆனால், நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் நிலையில் பிரதமர் பதவியைப் பொறுப்பெடுப்பது தனது அரசியல் எதிர்காலத்துக்கு சவாலாகிவிடலாம் என்பதால் அவர் அதனை மறுத்தார். கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் உபாயம் சஜித்துக்கு தெரிந்திருக்கவில்லை.

அதனையடுத்தே ரணிலின் பக்கம் கோட்டாபயவின் கவனம் திரும்பியது. அதனைவிட, தற்போது ரணில் ஜனாதிபதியாக வந்திருப்பதற்கும் சஜித்தின் தயக்கமே காரணம். தான் போட்டியிடுவதை இறுதி நேரத்தில் தவிர்த்து டல்லஸ் அழகப்பெருமவைக் களமிறக்கியதன் மூலம் – அவரது கட்சியினரே இறுதி வேளையில் அவரை ஆதரிக்க தயங்கினார்கள். சஜித்தின் ஆதரவாளர்கள் சுமார் 14 பேர் ரணிலுக்கு வாக்களித்ததாகச் சொல்லப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்பது ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்தளவு பெரும்பான்மை அவருக்கு கிடைக்கும் என்பது எதிர்பார்க்கப்படாதது. பெரும்பாலான சிறுபான்மையினக் கட்சிகளும், ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன டல்லஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் பல உறுப்பினர்கள், கட்சித் தலைமையின் முடிவை மீறி ரணிலுக்கு வாக்களித்தமையால் தான் இந்தளவு அதிகளவு வாக்குகளை அவரால் பெறமுடிந்தது.

ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க முன்பாக உள்ள சவால்கள் பல. அதனை அவர் எவ்வாறு சமாளிக்கப்போகின்றார் என்பதில் தான் அவரது உண்மையான வெற்றி தங்கியுள்ளது. முதலாவதாக – பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கின்றது. பல குடும்பங்கள் மூன்று நேரமும் உணவருந்த முடியாத நிலையில் இப்போதுள்ளன. இதற்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது பிரதான பிரச்சினை. அதிகரித்த வாழ்க்கைச் செலவு ஒருபுறம். வேலை இழப்புக்கள் மறுபுறம் அனைத்துக் குடும்பங்களையும் பாதிக்கின்றது.

ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் ரணிலுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள். இது ரணில் எதிர்கொள்ளவேண்டியுள்ள மற்றொரு பிரச்சினை. இதனைப் படைப்பலத்தின் மூலம் எதிர்கொள்வது என்ற ரணிலின் முடிவு பாரதூரமான விளைவுகளைக்கொண்டுவரக்கூடியது. பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் உபாயத்தை ரணில் கையாண்டிருக்க முடியும்.

இதனைவிட சர்வதேச உதவிகளைப் பெற்று பொருளாதாரத்தை மீளக்கட்டியமைப்பது அவசியம். இதனை செய்யக்கூடிய ஒருவராகவே ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை மக்கள் பார்க்கின்றார்கள். சர்வதேசத் தொடர்புகள், மேற்கு நாடுகளுக்கு சார்பான அவரது அணுகுமுறை என்பன இவ்விடயத்தில் அவருக்கு உதவலாம். சர்வதேச நாணய நிதியம் ரணிலின் தெரிவையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கை அவருக்கு உற்சாகமளிப்பதாக அமையலாம்.

ஆனால், ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியவர்கள் வெள்ளிக்கிழமையுடன் தமது போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் தான் வெள்ளி அதிகாலை மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் என அனைவரும் சகட்டுமேனிக்கு தாக்கப்பட்டனர். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலில் 20 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.

இராணுவம் தொடர்பில் சிங்கள மக்களிடம் காணப்பட்ட பிம்பம் இந்தத் தாக்குதலுடன் கலைந்துபோயுள்ளது. இராணுவம் குறித்த அவர்களுடைய கருத்துக்களில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சமூக ஊடகங்களில் அவர்கள் வெளியிடும் பதிவுகளில் காணமுடிகின்றது.

“இசை உனக்கு வலித்திருக்கும்” என சமிந்த ஜெயசூரிய என்ற சிங்களவர் காலிமுகத்திடலில் காயமடைந்த ஊடகவியலாளரின் படம் ஒன்றுடன் இசைப்பிரியாவின் படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் வலி என்பதை சிங்கள மக்கள் புரியத் தொடங்கி விட்டார்கள் என்பதை இது உணர்த்துகின்றது.

‘இராணுவம் போர்க்குற்றம் இழைத்தது என்பதை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என லோட்டஸ் வீதியில் உள்ள இராணுவ வீதித் தடைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்’ என சமூக செயற்பாடாளரான சிங்களப் பெண்மணி ஒருவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இசுறு பிரியங்கரா என்ற மற்றொரு சிங்களவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இன்று தமக்கு நிகழ்ந்த பின்னரே போரின்போது தமிழர்களுக்கு எதிராக எந்தளவுக்கு போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை தம்மால் உணர முடிகின்றது என அவர் குறிப்பிடுகின்றார். இது போல சிங்கள மக்களுடைய மனச்சாட்சியை தொட்ட பல பதிவுகளையும் சமூக ஊடகங்களில் காணமுடிகின்றது.

காலிமுகத் திடல் சர்வதேச, உள்நாட்டு ஊடகங்களின் கவனம் குவிந்துள்ள ஒரு இடம். சமூக ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பை தரக்கூடிய ஒரு இடம். சுற்றிவரவுள்ள தூதரகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் அவதானிப்பை கொண்டுள்ள ஒரு இடம். அங்கு என்ன நடந்தாலும் அடுத்த நிமிடமே உலகம் முழுக்கத் தெரிந்துவிடும்.

அவ்வாறான ஒரு பகுதியிலேயே இவ்வாறு நடைபெற்றுள்ளது. அவ்வாறாயின் சாட்சிகளே இல்லாத – வெளித் தொடர்புகளே இல்லாதிருந்த வன்னியில் என்ன நடைபெற்றிருக்கும் என சிங்கள மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளமைக்கு ஆதாரமாக பதிவுகள் உள்ளன. சிங்கள மக்களின் மனச்சாட்சியை ரணில் தட்டி எழுப்பிவிட்டுள்ளார்.

அதற்காக சிங்கள மக்கள் எமக்கு ஆதரவாக மாறிவிடுவார்கள் என நம்பிக்கொண்டிருக்க முடியாது.