இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும் | தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

”இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் – என்ன சொன்னார் ஜெய்சங்கர்?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. தில்லியில் இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில், இலங்கையில் இப்போது நீடித்து வரும் பொருளியல் நெருக்கடி இந்தியாவிலும் எதிரடிக்குமா என்று ஒப்பிடுவது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தாராம். இதே கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டிருந்தால் இந்தியாவின் பொருளியல் நெருக்கடி பற்றி அவர் சொல்லியிருக்கக் கூடும்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு, எம்.எம். அப்துல்லா (திமுக), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), எம்.தம்பிதுரை (அதிமுக), வைகோ (மதிமுக), கேசவ ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ் கட்சி) விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனராம். இந்தத் தலைவர்களில் யாரைக் கேட்டாலும் இந்தியாவின் பொருளியல் நெருக்கடி பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

இந்தியாவுக்கு வெகு அருகே உள்ள நாடு இலங்கை என்பதால் அங்கு ஏற்படும் விளைவு குறித்து இயல்பாகவே இந்தியா கவலை கொண்டுள்ளது என்றார் ஜெய்சங்கர். இலங்கையில் உள்ள நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமா என்று அவரிடம் சில கட்சிகளின் தலைவர்கள் கேட்ட போது, அத்தகைய ஒப்பீடுகள் தவறான தகவல் அடிப்படையில் வருபவை என்று பதிலளித்தார். இலங்கையைப் போல் இந்தியாவில் நெருக்கடி ஏற்படாது என்று ஆறுதல் அளித்தாராம் .

உலகமயத்தின் காரணத்தாலும், புதுத்தாராளியத்தின் தாக்கத்தாலும்  நீடித்த, உலகளாவிய பொருளியல் நெருக்கடி என்பது உலக மக்கள் வாழ்வில் நிலையான தன்மை பெற்று விட்டது. பெருந்தொற்று இந்த நெருக்கடியை வெகுவாக முற்றச் செய்து விட்டது. பொருளியல் நெருக்கடியோடு சூழலியல் நெருக்கடியும் சேர்ந்து உலகை அச்சுறுத்திக் கொண்டுள்ளன. உறைபனிக் காடாய்க் குளிர்ந்து கிடந்த நாடுகள் வெப்ப உலைகளாகத் தகிக்கின்றன.

போரற்ற உலகம் என்பதே வெறுங்கனவாகி விட்டது. உலகின் ஏதாவது ஒரு பகுதியிலோ சில பகுதிகளிலோ போர்கள் தொடர்ந்து நடந்த வண்ணமுள்ளன. நாடுகளுக்கிடையிலே மட்டுமன்று, உள்நாட்டளவிலும் போர்கள் நடந்த வண்ணமுள்ளன. போர்கள் நடந்தால்தான் போர்க்கருவிகள் விற்பனையாகும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசுகளின் தொழில்துறை போர்களையே பெரிதும் நம்பியுள்ளது.

இந்தப் பின்னணியில் உருசிய வல்லரசு பன்னாட்டுச் சட்டங்களைக் கிஞ்சிற்றும் மதியாமல் உக்ரைன் மீது தொடுத்துள்ள வன்கவர் போர் உலக அமைதிக்கும் வாழ்வுக்கும் மட்டுமன்று, மாந்தக் குலத்தின் பொருளியல் பிழைப்புக்கும் பெருங்கேடாக வளர்ந்து நிற்கிறது.  இது உலகுதழுவிய நெருக்கடி! எந்த நாடும் இதிலிருந்து தப்ப இயலாது. இந்தியா, சீனம், உருசியா, அமெரிக்கா உட்பட!

இலங்கை சந்திக்கும் நெருக்கடியின் அத்தனைக் கூறுகளையும் இந்தியாவும் – வேண்டுமானால் சற்றுக் குறைந்த அளவில் – சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. இலங்கையிலுள்ள பணவீக்கம், விலையுயர்வு, வேலையின்மை இவையனைத்தும் இந்தியாவிலும் உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான ஒப்பீட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை எப்படிப் புரிந்து கொள்வது?

இலங்கை போல் இந்தியாவில் நெருக்கடி இல்லை என்று ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்த அதே நாளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80க்கும் கீழே சரிந்து சென்றது.

இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர் அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர் வேறு எந்தவொரு நாடும் இந்தியா செய்து வருவது போன்ற உதவியை இலங்கைக்கு வழங்கியதில்லை என்று தெரிவித்தார். இலங்கைக்குக் கடன் தரும் பன்னாட்டுப் பண நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் அந்நாட்டுக்காக இந்தியா பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

”இந்தியா இலங்கைக்கு தர்மம் செய்யவில்லை” என்று இரணில் சொல்லியிருப்பதை யாரும் ஜெய்சங்கருக்கு நினைவூட்டவில்லை.

இந்தியா உள்ளிட்ட உலகெல்லாம் நெருக்கடியின் மாறுபட்ட படிநிலைகளில் இருக்க, இலங்கை இப்படி நொறுங்கித் தகர்ந்து போக என்ன காரணம்? தேயிலை, ஆடையணி ஏற்றுமதியில் சரிவு, சுற்றுலாவில் நலிவு, வேதியுரங்கள் இறக்குமதிக்கு அவசரத்தடை என்று காரணங்கள் அடுக்கப்பட்டாலும் மூலகாரணமாகிய படைச் செலவும் அதற்கு வழிகோலிய இனவழிப்புப் போரும் எடுத்துக் காட்டப்படுவதே இல்லை. இனவழிப்புக் கூட்டாளி இந்தியாவின் அயலுறவு அமைச்சர் எப்படி இந்த உண்மையைச் சொல்வார்?

இலங்கை எனும் சதுரங்கப் பலகையில் சீனத்துடனான புவிசார் அரசியல் போட்டியில் சிங்களர்கள் ஆனாலும் தமிழர்கள் ஆனாலும் பகடைகளே என்பதுதான் இந்திய அணுகுமுறையின் சாரம். அதிலும் ஜெய்சங்கரின் தலைவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

இலங்கை மின்வாரியத்தின் தலைவர் எம் எம் சி பெர்டினாண்டோ முதலில் என்ன சொல்லிப் பதவி விலகினார்? என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு காற்றாலை மின் திட்டத்தை அதானிக்கு விடும் படி கோட்டபயா நிர்ப்பந்தித்தாராம். ஏனென்றால் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி அவருக்கு அவ்வளவு அழுத்தம் கொடுத்தாராம். துக்க வீட்டில் ஒப்பாரிக்கு நடுவில் பந்தலில் தொங்கிய பாகற்காயின் மேல் கடைக்கண் வைத்த பெண்மணி பற்றிய கதை தெரியும்தானே?

இதற்கும் மேலே சிங்கள பௌத்தப் பேரினவாதத்தையும் இந்தியப் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இணைத்து அகண்ட பாரதம் படைக்கும் பேராசை மோதி வகையறாவுக்கு  உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் வந்த வண்ணமுள்ளன. இந்தியப் பாசிசத்தின் கடைக்கண் பார்வையில் ஈழத் தமிழர்கள் மயங்கிடாத வரை நன்று.

தமிழர்கள் இந்திய வல்லரசை நம்பி ஏமாந்தது போதும். சிங்களர்கள் ஆனாலும் தமிழர்கள் ஆனாலும் இந்தியாவையோ சீனாவையோ வேறு வல்லரசையோ நம்பாமல் தங்களது உரிமைப் போராட்டங்களை நம்பி நின்றால் வெற்றி உறுதி!