இலங்கையில் கோட்டா நியமித்த ஜனாதிபதி செயலணியை கலைத்தார் ரணில்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார்.

குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்தார். அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையான வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே, அந்த எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

இதையடுத்து, அந்த செயலணியில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாக பின்னர் சேர்க்கப்பட்டனர்.

‘தொல்பொருள் உள்ள இடங்கள்’ எனத் தெரிவித்து, சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமையின் காரணமாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தேவையற்ற ஒன்றாகவே சிறுபான்மை மக்கள் கருதினர்.

இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி, மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுறுத்தியுள்ளதாக, தனது விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் – ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக,  ஊடகவியலாளர் றிப்தி அலி கூறினார்.

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ள நிலையில், அதற்கென வழங்கப்பட்ட கடமைகள் அனைத்தும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட 2289/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த கடமைகள் மேற்படி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி- பிபிசி தமிழ்