1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் இந்த நாட்டில் தமிழ்மக்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணர முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்தவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றும் போது துரைராசா ரவிகரன் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இதுவரை கிட்டாத நீதிக்காக 43 ஆண்டுகளாகியும் எங்கள் ஒவ்வொரு சாட்சியும் மெல்ல மெல்ல வயது முதிர்ந்து காலமாகிச் செல்ல, எஞ்சியிருக்கும் சாட்சிகளோடு இன்றும் நீதிக்காக காத்திருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்று போராடி பிரித்தானியரை வெளியேற்றி ஒன்றாகி அடைந்த ஒரு விடுதலை, பின்னாளில் தனித்த ஒரு பெரு இனத்துக்கு மட்டும் தானா?… என்று எம்மில் எல்லோருமே கேட்கின்ற அளவுக்கு இந்தத்தீவில் எங்களின் விடுதலை மீளப் பறித்தெடுக்கப்பட்டது”.
“நாங்கள் நீண்ட காலமாக மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கிறோம். காத்திருப்பதும், சொந்த நிலங்களில் இருந்து கலைக்கப்படுவதும், வன்முறையால் சொத்துகளும் உயிர்களும் அழிக்கப்படுவதும் தான் இத்தீவில் மாறி மாறி வந்த அரசுகள் எங்களுக்கு ஈந்திருப்பவை” என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மைத்திரேயி இராமகிருஷ்ணன் தன்னை தமிழ் ஈழப்பெண்ணாகக் கூறிவிட்டார் என்றவுடனேயே இத்தீவில் சலசலப்பும் சமூக வலைத்தள எதிர்ப்புகளும் குவிந்துவிட்டன.
நாங்கள் கொல்லப்பட்டதே உங்களுக்கு வெற்றியாகும் போது எவ்வாறு நீங்களும் நாங்களும் ஒன்றாக முடியும் என்றும் ஒரு கையால் மறுகையைத் துண்டிப்பதை வெற்றி எனலாமா என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.



