2027க்குள் யாழ்ப்பாணத்தை கண்ணிவெடியற்ற மாவட்டமாக மாற்ற முடியும் என நம்பிக்கை

2027ல் கண்ணிவெடியற்ற மாவட்டமாக யாழ்ப்பாணத்தையும் இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக மாற்றுவதற்கும் ஹலோட்ரஸ் (halotras) மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் நிறுவனம் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் ஹன்னா பிக்டன் (Hannah Picton) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வரும் இவ்வமைப்பு, 2011 ஆம் ஆண்டு முதல் முஹமாலையில் 6 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலங்கள் பகுதி பகுதியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.

1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக முஹமாலை பகுதியிலிருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு நீண்டகாலம் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த கடைசி சில குடும்பங்களும் மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்பி மீள்குடியேற முடிந்துள்ளது.

இலங்கையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்ற அரசுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஹன்னா பிக்டன் (Hannah Picton) தெரிவித்துள்ளார்.