மட்டக்களப்பு: எரிபொருட்கள் விற்பனை நிலையத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் பொதுமக்கள் விசனம்

எரிபொருட்கள் விற்பனை நிலையத்தில் முன்னெடுக்கப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் சில எரிபொருட்கள் விற்பனை நிலையத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான எரிபொருட்கள் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் பொதுமக்கள் நீண்ட வரிசைகளிலிருந்தே எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

இன்று அதிகாலை மட்டக்களப்பு ஊறணியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டதை காணமுடிந்தது.

அதிகாலையில் பல்வேறு தொழிலுக்காக சென்றவர்கள் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வருகைதந்த போதிலும் எரிபொருள் இல்லையென்று திருப்பியனுப்பிய நிலையில் சில வாகனங்களுக்கு அங்கு எரிபொருள் நிரப்பப்படுவதை கண்ட மக்கள் அது தொடர்பில் கேள்வியெழுப்பினர்.

அதிகாலை வேளையில் தாங்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன்போது பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். எனினும் வைத்தியர்கள் உட்பட அத்தியாவசிய தேவைக்காக செல்வோருக்கு மட்டும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சேர்ந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் காலை வேளையில் சென்று தமது தொழிலைசெய்தால்தான் தமது குடும்பத்திற்கு உணவு வழங்கமுடியும் பெற்றோல் இல்லாத காரணத்தினால் தமது தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது பொதுமக்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.